500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை - பள்ளிக்கல்வித்துறை
|பள்ளிக்கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககத்தில் பணியாற்றிய 500 ஆசிரியர் பயிற்றுநர்கள், 2021-22-ம் கல்வியாண்டில், பட்டதாரி ஆசிரியர்களாக பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்
சென்னை,
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன், பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
பள்ளிக்கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககத்தில் பணியாற்றிய 500 ஆசிரியர் பயிற்றுநர்கள், 2021-22-ம் கல்வியாண்டில், பட்டதாரி ஆசிரியர்களாக பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த பணியிட மாற்றத்தை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டிலும், மதுரை கிளையிலும் இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் மீதான உத்தரவின் அடிப்படையில், ஆசிரியர் பயிற்றுநர் பதவியில் இருந்து பட்டதாரி ஆசிரியர்களாக கடந்த 2021-22-ம் கல்வியாண்டில் இடமாற்றம் செய்யப்பட்ட 500 பேருக்கு, பொது இடமாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்க அனுமதி கோரி, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கை கவனத்துடன் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. அதன்படி, 2021-22-ம் கல்வியாண்டில் பட்டதாரி ஆசிரியர்களாக இடமாற்றம் செய்யப்பட்ட 500 பேருக்கு 2024-2025-ம் கல்வி ஆண்டுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்க அரசு அனுமதி வழங்கி உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.