குழந்தை கடத்தல் வதந்தி: சென்னை ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் திருநங்கை மானபங்கப்படுத்தப்பட்ட அவலம்
|குழந்தை கடத்தல் வதந்தியில் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் திருநங்கையை மின்கம்பத்தில் கட்டிவைத்து மானபங்கப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை,
சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள பிரபல ஐ.டி.நிறுவனத்தில் திருநங்கை ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர், தான் தங்கியுள்ள பம்பல் மூங்கில் ஏரி பகுதியில் உள்ள உணவகத்தில் நேற்று இரவு உணவு சாப்பிட்டுவிட்டு தனியாக நடந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
இதனிடையே, பம்பல் பகுதியில் சிலர் குழந்தை கடத்தலில் ஈடுபடுவதாக சமூகவலைதளத்தில் வதந்தி பரவியது. இதனால், வீடு திரும்பிக்கொண்டிருந்த திருநங்கை குழந்தை கடத்தலில் ஈடுபடுபவர் என நினைத்த சிலர் திருநங்கையை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், திருநங்கையை மின்கம்பத்தில் கட்டிவைத்து ஆடைகளை கிழித்து மானபங்கப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து அந்த கும்பலிடமிருந்து திருநங்கையை மீட்டனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர். திருநங்கை மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.