திருநெல்வேலி
மேலப்பாளையத்தில் ரெயில்கள் நின்று செல்ல வேண்டும்- பயணிகள் குழு வலியுறுத்தல்
|மேலப்பாளையத்தில் ரெயில்கள் நின்று செல்ல வேண்டும் என்று பயணிகள் குழு வலியுறுத்தி உள்ளது.
மேலப்பாளையம் ரெயில் பயணிகள் குழு சார்பில், தெற்கு ரெயில்வே அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறிஇருப்பதாவது:-
பாளையங்கோட்டை தாலுகா மேலப்பாளையத்தில் சுமார் 2 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு தினசரி சந்தை, வாரச்சந்தை என வியாபார தலங்களும் இருப்பதால் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதியாக உள்ளது. மேலப்பாளையத்தில் ரெயில் நிலையம் மேம்படுத்தப்பட்டு, பயணிகள் வசதிக்காக 3 பிளாட்பாரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த வழியாக அனந்தபுரி, குருவாயூர், பெங்களூரு, கன்னியாகுமரி, கோவை, மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில்கள், திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி, தாம்பரம் அந்தியோதயா மற்றும் நாகர்கோவில்-கோவை, நெல்லை -நாகர்கோவில் பாசஞ்சர் ரெயில்கள் உள்ளிட்ட பல்வேறு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலப்பாளையம் ரெயில் நிலையத்தில் 3 பிளாட்பாரங்கள் இருந்தும் ஒரு ரெயில்கூட நின்று செல்வதில்லை. இதனால் பொதுமக்கள் மேலப்பாளையம் ரெயில் நிலையத்தை பயன்படுத்த முடியவில்லை.
மதுரை-நாகர்கோவில் இரட்டை ரெயில்பாதை திட்டத்தின் கீழ் மேலப்பாளையம் ரெயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் மிகப்பெரிய கிராசிங் நிலையமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் புதுப்பிக்கப்படுவதற்கு முன்பு, அதாவது பிளாட்பாரம் இல்லாதபோது நின்று சென்ற ரெயில்கள்கூட தற்போது நிற்பதில்லை. எனவே மேலப்பாளையம் பகுதி பொதுமக்களின் நலன் கருதி இங்கு பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலப்பாளையம் ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு மைய வசதி கொண்டுவர வேண்டும். ரெயில் வருகை, புறப்பாடு குறித்த அறிவிப்பு பலகைகள், ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பு போன்ற வசதிகளையும் உருவாக்க வேண்டும். ரெயில் நிலையத்தில் கழிப்பிட வசதியும் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.