சென்னை
ஆவடி ரெயில் நிலையத்தில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியால் ரெயில்கள் தாமதம்; பொதுமக்கள் அவதி
|ஆவடி ரெயில் நிலையத்தில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியால் சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதுடன், மற்ற ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
மழைநீர் கால்வாய்
ஆவடி ரெயில் நிலையத்தில் சி.டி.எச். சாலையில் இருந்து ரெயில் தண்டவாளத்தை கடந்து விளிஞ்சியம்பாக்கம் ஏரிக்கு செல்லும் வகையில் மழைநீர் கால்வாய் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. ஆனால் கால்வாய் தூர்ந்து போனதால் மழை காலங்களில் ரெயில் தண்டவாளங்களில் மழைநீர் குளம்போல் தேங்குவதால் ரெயில்கள் செல்வதில் மிகுந்த சிரமம் மற்றும் சிக்னல் கோளாறு ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் ரெயில் தண்டவாளங்களுக்கு இடையே மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியில் ரெயில்வே நிர்வாகம் ஈடுபட்டது. இதற்காக 2 ராட்சத கிரேன்கள் கொண்டு வரப்பட்டது.
மின்சார ரெயில்கள் ரத்து
நேற்று முன்தினம் இரவு 11 மணியிலிருந்து நேற்று மாலை வரை சென்னையில் இருந்து அரக்கோணம் மார்க்கமாகவும், அரக்கோணத்தில் இருந்து சென்னை மார்க்கமாகவும் மின்சார ரெயில்கள் செல்லும் தண்டவாளத்தில் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக திருவள்ளூரில் இருந்து ஆவடி மற்றும் சென்னை மார்க்கமாக 3 ரெயில்களும், சென்னையிலிருந்து திருவள்ளூர், பட்டாபிராம் சைடிங், ஆவடி மார்க்கமாக செல்லக்கூடிய 6 மின்சார ரெயில்கள் என மொத்தம் 9 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. மீதமுள்ள ரெயில்கள் மிகவும் தாமதமாக விரைவு மின்சார ரெயில்கள் செல்லும் தண்டவாளத்தில் இயக்கப்பட்டன.
பயணிகள் அவதி
அந்த ரெயில்கள் ஆவடி ரெயில் நிலையத்தில் 3 மற்றும் 4-வது நடைமேடை உள்ள தண்டவாளங்கள் வழியாக சென்றன. மேலும் விரைவு மின்சார ரெயில்கள் செல்லக்கூடிய தண்டவாளத்தில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டதால் ரெயில் தண்டவாளத்தை ஒட்டி நடைமேடை இல்லாத ரெயில் நிலையங்களில் மின்சார ரெயில்கள் நிற்காமல் சென்றது.
இதனால் நேற்று காலை குரூப்-4 தேர்வுக்கு செல்லக்கூடியவர்கள் மற்றும் பல்வேறு அலுவல் காரணமாக செல்லக்கூடிய பொதுமக்கள் ரெயில்கள் தாமதமாகவும், சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதாலும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். மேலும் தாமதமாக ரெயில்கள் இயக்கப்பட்டதால் அதில் பயணிகள் முண்டியடித்து ஏறியதால் கூட்ட நெரிசலில் சிக்கி கடும் அவதிக்குள்ளானார்கள்.