< Back
மாநில செய்திகள்
விண்ணப்பங்களை சரிபார்த்து செயலியில் பதிவேற்ற பயிற்சி
நீலகிரி
மாநில செய்திகள்

விண்ணப்பங்களை சரிபார்த்து செயலியில் பதிவேற்ற பயிற்சி

தினத்தந்தி
|
22 Aug 2023 7:00 PM GMT

கோத்தகிரியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்களை சரிபார்த்து செயலியில் பதிவேற்றம் செய்வது குறித்து அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கோத்தகிரி

கோத்தகிரியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்களை சரிபார்த்து செயலியில் பதிவேற்றம் செய்வது குறித்து அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

மகளிர் உரிமைத்தொகை

தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் வருகிற செப்டம்பர் 15-ந் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. உரிமைத்தொகை பெற ரேஷன் கடைகள் மூலம் விண்ணப்பம் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் அந்தந்த பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தொடர்ந்து தன்னார்வலர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்தனர்.

இதையடுத்து அலுவலர்கள் மூலம் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்வதற்காக தமிழக மென்னாளுமை முகமை இயக்ககம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்ற செயலியை உருவாக்கி உள்ளது. அந்த செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், கிராம உதவியாளர்கள் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் நேற்று செயலியை பயன்படுத்துவது, விண்ணப்பங்களை சரிபார்த்து பதிவேற்றம் செய்வது குறித்த பயிற்சி முகாம் நடந்தது.

விவரங்கள் உள்ளீடு

முகாமுக்கு குன்னூர் ஆர்.டி.ஓ. பூஷணகுமார் தலைமை தாங்கினார். முகாமில் அலுவலர்கள் பேசும்போது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட செயலியில் தங்களது செல்போன் எண் மற்றும் கடவுச்சொல்லை பதிவிட்டு உள்ளே நுழைய வேண்டும். பின்னர் புதிய படிவம் மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட படிவம் என 2 பிரிவுகள் திரையில் இருக்கும். அதில் புதிய படிவத்தை தேர்வு செய்து அதில் விண்ணப்பதாரரின் பெயர், முகவரி, ஆதார் உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த செயலி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இல்லை. சமர்ப்பிக்கப் பட்ட விண்ணப்ப நிலை குறித்து அறிந்துகொள்ளும் வகையில் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பங்களை சரிபார்த்து செயலியில் பதிவேற்ற வேண்டும் என்றனர். மேலும் அனைத்து அலுவலர்களும் செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டதுடன், அந்த செயலியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த செயல்விளக்கமும் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமில் கோத்தகிரி தாசில்தார் கோமதி, கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், 11 ஊராட்சி செயலர்கள் உள்பட மொத்தம் 70 பேர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்