< Back
மாநில செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி

தினத்தந்தி
|
1 July 2022 7:24 PM GMT

பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

செஸ் போட்டி குறித்து பயிற்சி

சென்னை மாமல்லபுரத்தில் 44-வது ஒலிம்பியாட் செஸ் போட்டிகள் வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, அரசு மற்றும் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு செஸ் போட்டிகள் வருகிற 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடத்தப்படவுள்ளது.இதற்காக பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாவட்டத்தில் மேற்கண்ட பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் செஸ் பயிற்சி முகாம் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடத்தப்பட்டது.

சான்றிதழ் வழங்கப்பட்டது

முகாமில் கலந்து கொண்ட 90 உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு தேசிய அளவிலான செஸ் விளையாட்டு வீரர் கார்த்திக் ராஜா செஸ் போட்டி குறித்து பல்வேறு பயிற்சிகளை அளித்தார். பின்னர் செஸ் பயிற்சி பெற்ற உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மாலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் சான்றிதழை வழங்கினார்.இதில் கல்வி மாவட்ட அலுவலர்கள் சண்முகம் (பெரம்பலூர்), ஜெகநாதன் (வேப்பூர்), மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர், பள்ளி உடற்கல்வி இயக்குனர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பள்ளிகளில் செஸ் போட்டிகள்

பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு பள்ளி அளவில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் முதல் 2 இடங்களை பிடிப்பவர்களுக்கு வட்டார அளவிலும், அதில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு மாவட்ட அளவிலும் செஸ் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் முதல் 2 இடங்களை பிடிப்பவர்கள் மாநில அளவில் நடைபெறும் பயிற்சி முகாம், போட்டிகளில் கலந்து கொள்வார்கள். மேலும் அவர்கள் சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டி வீரர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பை பெறுவார்கள். 9 மற்றும் 10-ம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்படும் போட்டிகளில் மாவட்ட அளவில் முதல் இடம் பிடிப்பவர்கள் ஒலிம்பியாட் செஸ் போட்டிகளை பார்வையிடும் வாய்ப்பை பெறுவார்கள் என்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்