< Back
மாநில செய்திகள்
இயற்கை உரம் தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
விழுப்புரம்
மாநில செய்திகள்

இயற்கை உரம் தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

தினத்தந்தி
|
6 Jun 2023 6:45 PM GMT

இயற்கை உரம் தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர்சகாய் மீனா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்

பிரம்மதேசம்

வேளாண் வளர்ச்சி திட்டங்கள்

மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்தில், வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர்சகாய் மீனா நேரில் ஆய்வு செய்தார்.

முன்னதாக மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கந்தாடு ஊராட்சியில் சோலார் கருவியில் இயங்கும் நீர் இறைக்கும் எந்திரத்தை ஆய்வு செய்த அவர் தொடர்ந்து கொளத்தூர் ஊராட்சியில் கலைஞரின் இயற்கை இடுபொருள் உற்பத்தி மையத்தையும், கட்டளை ஊராட்சியில் மண்புழு உரம் தயாரிக்கும் மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

கந்தாடு ஊராட்சியில் வேளாண் பொறியியல் துறை சார்பில் ரூ.2 லட்சம் மானியத்தில் விவசாய நிலத்தில் சோலார் கருவி மூலம் இயங்கும் நீர் இறைக்கும் எந்திரம் செயல்பட்டு வருகிறது. இதை மற்ற விவசாயிகளும் தெரிந்துகொண்டு பயன்படுத்திடும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கொளத்தூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் கலைஞரின் இயற்கை இடுபொருள் உற்பத்தி மையத்தில், விவசாய குழுவின் சார்பாக உற்பத்தி செய்யப்படும் வேளாண் இடுபொருட்களை விவசாயிகள் தங்கள் பயன்பாட்டுக்கு போக மீதமுள்ளவற்றை மற்ற விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.கட்டளை ஊராட்சியில் நாட்டு காய்கறிகளான தக்காளி, அவரை, மிளகாய், பாகற்காய், வெண்டை போன்றவற்றை விவசாயிகள் சாகுபடி செய்ய உரிய பயிற்சி அளிக்க வேண்டும்.

இயற்கை உரம் தாயாரிப்பு பயிற்சி

இயற்கை உரங்களை பயன்படுத்திடும் வகையில், விவசாயிகளுக்கு இயற்கை உரம் தயாரிப்பு குறித்து பயிற்சி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் கணேசன், துணை இயக்குனர் (திட்டங்கள்) பெரியசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) சண்முகம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அன்பழகன், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் பழனிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்