கோயம்புத்தூர்
ஆனைமலையில் மிளகு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
|ஆனைமலையில் மிளகு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
ஆனைமலை
ஆனைமலை வட்டார தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக வால்பாறை டாடா காபி லிட் நிறுவனத்துடன் இணைந்து மிளகு சாகுபடி குறித்த பயிற்சி கூட்டம் ஆனைமலை தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் கோபிநாத் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மிளகு ரகங்களான பன்னியூர் எஸ் மற்றும் தேவம் போன்ற ரகங்களின் விளைச்சல், சாகுபடி குறித்த தொழில்நுட்பம், தென்னை மற்றும் தேக்கு மரங்களில் எவ்வாறு பற்றி வளரும் என்பது குறித்து விளக்கப்பட்டது. நாற்றுகள் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் முறை குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் மிளகு செடியில் வளரும் பூச்சி மற்றும் நோய் குறித்த விளக்கங்கள் அதனை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மிளகு அறுவடைக்குப்பின் செய் நேர்த்தி குறித்த தொழில் நுட்பங்கள் மிகச் சிறந்த முறையில் பயிற்றுவிக்கப்பட்டது. விவசாயிகள் தங்கள் சந்தேகங்களை கேட்டு அறிந்தனர். மேலும் மிளகு நாற்றுகள் தேவை மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளை தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் தொடர்பு கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம். இதில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.