திருவள்ளூர்
திருவள்ளூரில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு
|சிறுபான்மையினர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டி பயிற்சி வகுப்புகள் நடத்தும் நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு
திருவள்ளூரில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் பயிலும் 10, 12-ம் வகுப்பு மற்றும் கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவ, மாணவியருக்கான 'வாழ்க்கை வழிகாட்டி' நிகழ்ச்சியை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசும்போது, 'திருவள்ளூர் மாவட்டத்தில் 33 பள்ளி விடுதிகளும் ஒரு கல்லூரி மாணவர் விடுதியும் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் 805 மாணவ மாணவியரும், திருத்தணி அரசு கல்லூரி மாணவர் பிற்படுத்தப்பட்ட நல விடுதியில் 120 மாணவர்களும் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.
வாழ்க்கை வழிகாட்டி
2022-2023-ம் ஆண்டிற்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடத்துவதற்காக பள்ளிகளில் பயின்று வரும் விடுதி மாணவர் மாணவியர்களுக்கு 2 கட்ட பயிற்சி வகுப்புகளும், கல்லூரி மாணவர்களுக்கு ஒரு கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி 2 இடங்களில் இந்த வகுப்புகள் முடிந்த நிலையில் தற்போது திருவள்ளூர், பூந்தமல்லி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.
பயிற்சி வகுப்புகள்
இந்த பயிற்சி வகுப்புகளை அனைவரும் முழுமையாக பயன்படுத்தி பயனடைய வேண்டும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ மாணவியர்களான நீங்கள் நன்றாக படித்தால் தான் உங்களின் வாழ்க்கை தரம் உயரும் என்பதை கருத்தில் கொண்டு படிக்க வேண்டும். நீங்கள் விடுதியில் தங்கி பயில்வதன் மூலம் படிப்பதற்கு அதிகம் நேரம் கிடைக்கிறது. எனவே அந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.
எனவே மாணவர்கள் இந்த பொதுத் தேர்வுகளுக்காக தங்களை முழு ஈடுபாட்டுடன் ஈடுபடுத்தி படித்து தேர்வில் வெற்றி பெறவும் அதிக மதிப்பெண்களை பெறவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கூரினார். இந்த நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.