
விழுப்புரம்
விழுப்புரம் திருப்பதி இடையேயான ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது

2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த விழுப்புரம்- திருப்பதி இடையேயான ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது. எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றப்பட்டு இயக்கியதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்
விழுப்புரம்
விழுப்புரம்- திருப்பதி ரெயில்
விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு ஏற்கனவே தினமும் அதிகாலை 5.30 மணிக்கும், மாலை 4.20 மணிக்கும் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது.
கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த 2 ரெயில்களின் சேவையும் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்ட ரெயிலை மட்டும் இயக்க முதல்கட்டமாக தென்னக ரெயில்வே அனுமதியளித்து கடந்த 10 மாத காலமாக அந்த ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
ஆனால் விழுப்புரத்தில் இருந்து மாலை 4.20 மணிக்கு திருப்பதிக்கு புறப்படும் பயணிகள் ரெயிலுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படாததால் அந்த ரெயில் சேவை மட்டும் நிறுத்தப்பட்டிருந்தது.
ரெயில் சேவை தொடங்கியது
இந்நிலையில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த விழுப்புரம்- திருப்பதி இடையேயான ரெயில் சேவையை மீண்டும் தொடங்க தெற்கு ரெயில்வே நிர்வாகம் அனுமதியளித்தது. அதேநேரத்தில் விழுப்புரத்தில் இருந்து மாலை 4.20 மணிக்கு திருப்பதிக்கு பயணிகள் ரெயிலாக இயக்கப்பட்டு வந்த ரெயில், ஜூலை 1-ந் தேதி முதல் தினசரி எக்ஸ்பிரஸ் ரெயிலாக இயக்கப்படும் என்றும் தெற்கு ரெயில்வே அறிவித்து இருந்தது. அதன்படி 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முதல் விழுப்புரம்- திருப்பதி இடையே மீண்டும் ரெயில் சேவை தொடங்கியது. விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 5.20 மணிக்கு 9 பெட்டிகளுடன் புறப்பட்ட இந்த ரெயில் திருக்கோவிலூர், ஆதிச்சனூர், திருவண்ணாமலை, போளூர், ஆரணி சாலை, சேதராம்பட்டு, ஒன்னுபுரம், கண்ணமங்கலம், வேலூர் கண்டோன்மெண்ட், காட்பாடி, ராமாபுரம், சித்தூர், பாகாலா, சந்திரகிரி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று இரவு 11 மணிக்கு திருப்பதியை சென்றடைந்தது.
பயணிகள் மகிழ்ச்சி
மறுமார்க்கத்தில் திருப்பதியில் இருந்து அதிகாலை 2.35 மணிக்கு புறப்பட்டு 10.45 மணிக்கு விழுப்புரம் வந்தடைகிறது. இந்த ரெயிலில் விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு முன்பதிவு செய்யாமல் பயணிக்க நபர் ஒருவருக்கு கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது.
இம்மார்க்கத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பயணிகள் ரெயிலாக இயக்கப்பட்டு வந்த ரெயில் எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றப்பட்டு அதன் சேவை தொடங்கியதால் பயணிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.