சிவகங்கை
திருச்சி-காரைக்குடி டெமு ரெயில் இயக்கம்
|திருச்சி-காரைக்குடி டெமு ரெயில் இயக்கப்பட்டது.
காரைக்குடி,
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பல்வேறு ரெயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி-காரைக்குடி இடையே ஏற்கனவே இயக்கப்பட்ட டெமு ரெயில் சேவை கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் இந்த ரெயில் போக்குவரத்து வருகிற 18-ந் தேதி முதல் இயக்கப்படுவதாக மதுரை ரெயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இயக்கப்பட்டது.
அதன்படி மாலை 4 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்ட இந்த பாசஞ்சர் டெமு ரெயில் மாலை 5.45 மணிக்கு காரைக்குடி வந்தடைந்தது. பின்னர் மீண்டும் அங்கிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு விருதுநகர் வரை நீடிக்கப்பட்டது.
இரவு 9 மணிக்கு விருதுநகருக்கு சென்றடைந்த இந்த ரெயில் நாளை காலை 6 மணிக்கு விருதுநகரில் இருந்து மீண்டும் புறப்பட்டு காலை 9.30 மணிக்கு காரைக்குடி ரெயில் நிலையத்திற்கு வந்தடைகிறது. அதன் பின்னர் 9.40 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்பட்டு திருச்சிக்கு பகல் 11.40 மணியளவில் சென்றடைகிறது.
தினந்தோறும் இந்த ரெயில் இயக்கப்படுவதால் அரசு அலுவலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினருக்கு இந்த ரெயில் உதவும் வகையில் அமைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.