< Back
மாநில செய்திகள்
பொன்னேரி ரெயில் நிலையம் அருகே ரெயில் என்ஜின் தடம் புரண்டதால் பரபரப்பு - ரெயில் சேவை பாதிப்பு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பொன்னேரி ரெயில் நிலையம் அருகே ரெயில் என்ஜின் தடம் புரண்டதால் பரபரப்பு - ரெயில் சேவை பாதிப்பு

தினத்தந்தி
|
13 Jun 2023 5:47 PM IST

பொன்னேரி ரெயில் நிலையம் அருகே மின்கம்பி மற்றும் தண்டவாளங்களை பராமரிக்கும் ரெயில் என்ஜின் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை பணிமனையில் இருந்து சென்னை சென்டிரல் கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் மின்கம்பி மற்றும் தண்டவாளங்களை பராமரிக்கும் ரெயில் என்ஜின் வந்தது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரெயில் நிலையம் அருகே அதிகாலை 3 மணியளவில் வந்த நிலையில், தண்டவாளங்கள் மற்றும் மின்சார கம்பிகளை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டது. அப்போது லூப் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்ட ரெயில் என்ஜின் முதல் பிளாட் பாரத்திற்கு செல்ல முயன்ற போது, திடீரென என்ஜின் சக்கரம் தடம் புரண்டு தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது. இது குறித்து சென்னை ரெயில்வே நிலைய அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து அங்கிருந்த பராமரிப்பு என்ஜின் ரெயில் சக்கரத்தை மேலே தூக்கி தண்டவாளத்தை சரி செய்தனர்.

ரெயில் என்ஜின் மீட்பு பணிகள் நடைபெற்றதால் சென்னை செல்லும் மின்சார ரெயில்கள் கால தாமதமாக புறப்பட்டு சென்றன. அதன் பின்னர் அவ்வழியாக வந்த மின்சார ரெயில்கள் வழக்கம் போல் இயங்கின. இதனால் சென்னை சென்டிரல் கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ஒரு மணிநேரம் சேவை பாதிப்பு ஏற்பட்டது. இணைப்பு லூப்லைனில் பராமரிப்பு ரெயில் என்ஜின் சக்கரம் தடம் புரண்டதால் பெரிய அளவில் ரெயில் சேவையில் பாதிப்புகள் ஏற்படவில்லை.

சென்டிரலில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்ற மின்சார ரெயில் பேசின் பிரிட்ஜ் அருகே நேற்று முன்தினம் தடம் புரண்ட சம்பவத்தை தொடர்ந்து நேற்று பராமரிப்பு ரெயில் என்ஜின் சக்கரம் தடம் புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்