< Back
மாநில செய்திகள்
வேலை நேரத்தை குறைக்கக்கோரி சென்டிரலில் ரெயில் டிரைவர்கள் உண்ணாவிரத போராட்டம்
மாநில செய்திகள்

வேலை நேரத்தை குறைக்கக்கோரி சென்டிரலில் ரெயில் டிரைவர்கள் உண்ணாவிரத போராட்டம்

தினத்தந்தி
|
11 Oct 2023 5:15 AM IST

வேலை நேரத்தை குறைக்கக்கோரி சென்னை சென்டிரல் மூர்மார்க்கெட் வளாகம் முன்பு ரெயில் டிரைவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலை நேரம்

சென்னை சென்டிரலில் தெற்கு ரெயில்வே மண்டலத்தின் ரெயில் டிரைவர்கள் (லோகோ பைலட்கள்) வேலை நேரத்தை குறைப்பது, வார ஓய்வு நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்பது உட்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு, அனைத்திந்திய ரெயில் டிரைவர்கள் சங்கத்தின் தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பாபுராஜன், பொருளாளர் ஜகேசன் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர், அனைத்திந்திய ரெயில் டிரைவர்கள் சங்கத்தின் தலைவர் குமரேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஓய்வு இல்லை

1973-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் மத்திய அரசால் ரெயில் டிரைவர்கள் வேலை 10 மணிநேரத்திற்கு மேலே இருக்காது என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நடைமுறையில் 15 மணி நேரமாக உள்ளது. ரெயிலின் எண்ணிக்கையும், வேகமும் அதிகரித்து விட்டது, ஆனால் எங்களின் வேலை நேரம் மட்டும் குறைக்கப்படவில்லை. ரெயில் டிரைவர்கள் கண் பார்வை, காது கேட்கும் திறன் என உடல்நிலை சரியாக இருக்க வேண்டும். அதற்கு சரியான ஓய்வு வேண்டும், ஆனால் சரியான ஓய்வு கொடுப்பதில்லை.

மேலும், 2004-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ரெயில்வேயை தனியார்மயமாக்குவதை கைவிட வேண்டும். ரெயில்வே துறையில் வேலை பார்க்கும் பெண் லோகோ பைலட்களுக்கு தகுந்த கழிவறை வசதி இல்லை. ரெயில்வே பயணிகள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள ரெயில் டிரைவர்களுக்கு சரியான வேலை நேரம் மற்றும் வார ஓய்வு கொடுக்கப்பட வேண்டும். ரெயில்வே நிர்வாகம் எங்களது கோரிக்கையை கவனத்தில் எடுத்துக்கொண்டு நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்