கிருஷ்ணகிரி
ராயக்கோட்டை அருகேசரக்கு ரெயில் தடம் புரண்டதுபோக்குவரத்து துண்டிப்பு
|ராயக்கோட்டை:
ராயக்கோட்டை அருகே உரம் ஏற்றிச்சென்ற சரக்கு ரெயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
தடம் புரண்டது
தூத்துக்குடியில் இருந்து உரம் ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் மாலை 42 பெட்டிகளுடன் சரக்கு ரெயில் பெங்களூருவுக்கு புறப்பட்டது. இந்த ரெயில் திருச்சி, சேலம், தர்மபுரி வழியாக பெங்களூரு ேநாக்கி சென்று கொண்டிருந்தது.
இந்த ரெயில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உடையாண்டஅள்ளி பகுதியில் வந்தது. அப்போது திடீரென ரெயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டன.
ரெயிலின் 3-வது பெட்டி முதல் 8-வது பெட்டி வரையில் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது. இதனால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ரெயில்வே பணியாளர்கள் விரைந்தனர்
இதுகுறித்து என்ஜின் டிரைவர்கள், ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சேலம், தர்மபுரி, பெங்களூரு பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ரெயில்வே பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சீரமைப்பு பணிகளை தொடங்கினர். ராட்சத கிரேன் மற்றும் மீட்பு எந்திரங்கள், ரெயில் என்ஜின்கள் வரவழைக்கப்பட்டன.
இதையடுத்து மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. இதன் காரணமாக தர்மபுரி- பெங்களூரு ரெயில் பாதையில் ரெயில் சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
இதனால் நாகர்கோவில், மயிலாடுதுறை, கோவை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து வரக்கூடிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. மேலும் சில பயணிகள் ரெயில்களும் ரத்து செய்யப்பட்டன.
விசாரணை
இதற்கிடையே சரக்கு ரெயில் உடையாண்டஅள்ளி ரெயில்வே கேட் அருகே வந்தபோது அந்த பகுதியில் புகை மண்டலமாக காட்சி அளித்ததாகவும், அப்போது சிக்னல் விழுந்ததன் காரணமாக ரெயில் நிற்க முயன்றபோது ரெயில் பெட்டிகள் தடம் புரண்டதாக கூறப்படுகிறது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து தென்மேற்கு ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். உரம் ஏற்றி சென்ற சரக்கு ரெயில் தடம்புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.