சிவகங்கை
சாலையோரம் தூங்கியபோது பரிதாபம்: வாகனம் மோதி ஆடு மேய்க்கும் தொழிலாளி பலி
|இளையான்குடி அருகே சாலையோரம் தூங்கியபோது வாகனம் மோதி ஆடு மேய்க்கும் தொழிலாளி பலியானார்.
இளையான்குடி அருகே சாலையோரம் தூங்கியபோது வாகனம் மோதி ஆடு மேய்க்கும் தொழிலாளி பலியானார்.
சாலையோரம் தூங்கினர்
பரமக்குடியை சேர்ந்தவர் போஸ்(வயது 55). திருவாடானை வெட்டுக்குளம் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(46). இவர்கள் இருவரும் காளையார் கோவில் காலக்கண்மாயை சேர்ந்த குமார் என்பவரிடம் ஆடு மேய்க்கும் தொழிலாளிகளாக வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இளையான்குடி-காளையார் கோவில் செல்லும் சாலையில் இளையான்குடி அருகே உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோன் அருகில் ஆட்டு கிடை அமைத்திருந்தனர்.
இதையொட்டி அவர்கள் சாலை ஓரத்தில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 4 மணி அளவில் அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் சாலையோரம் தூங்கி கொண்டிருந்த இருவர் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்றது.
ஒருவர் சாவு
இதில் படுகாயம் அடைந்த போஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ராமகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார். அவ்வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து அறிந்த இளையான்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாகனம் மோதி இறந்த போஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.