< Back
மாநில செய்திகள்
உறவினருடன் குளிக்க சென்றபோது பரிதாபம் -  கிணற்றில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் சாவு
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

உறவினருடன் குளிக்க சென்றபோது பரிதாபம் - கிணற்றில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் சாவு

தினத்தந்தி
|
29 Aug 2023 1:16 PM IST

உத்திரமேரூர் அருகே உறவினருடன் குளிக்க சென்றபோது கிணற்றில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

திண்டுக்கல் மாவட்டம் வி.ஐ.பி. நகரை சேர்ந்தவர் ராமசுப்பிரமணியம். இவரது மகன் ஸ்ரீராம் (வயது 24). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இவர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே அ.பி.சத்திரம் பகுதியில் உள்ள தனது பெரியம்மா வீட்டிற்கு வந்தார். பின்னர் ஸ்ரீ ராம் தனது பெரியம்மா மகன் ஹேமகுமார் என்பவருடன் சேர்ந்து வீட்டிற்கு அருகில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றார். இருவரும் குளித்துக் கொண்டிருக்கும் போது ஹேமகுமாருக்கு போன் வந்ததாக கூறப்படுகிறது.

ஸ்ரீராமிற்கு நீச்சல் தெரியாது. கிணற்று படியில் அமர்ந்து கொண்டு குளித்துக் கொண்டிருந்தார். கிணற்றுக்கு மேலே வந்து பேசிக் கொண்டிருந்த ஹேமகுமார் பின்பு கிணற்றில் பார்த்தபோது ஸ்ரீராமை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே அக்கம் பக்கத்தினரை அழைத்து அவர்கள் உதவியோடு கிணற்றில் இருந்து ஸ்ரீராமை சடலமாக மீட்டார்.

இதுகுறித்து உத்தரமேரூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் விநாயகம் உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த உத்திரமேரூர் போலீசார் ஸ்ரீராமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினர் வீட்டுக்கு வந்த இடத்தில் கிணற்றில் மூழ்கி வாலிபர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்