சென்னை
பொங்கல் விடுமுறையை கொண்டாட வந்தபோது பரிதாபம் - நட்சத்திர ஓட்டல் நீச்சல் குளத்தில் தவறி விழுந்த 4-ம் வகுப்பு மாணவி சாவு
|மாமல்லபுரத்தில் பெற்றோருடன் பொங்கல் விடுமுறையை கொண்டாட வந்த 4-ம் வகுப்பு மாணவி நட்சத்திர ஓட்டல் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் மப்பேடு பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் பிரேம் எட்வின். இவர் பொங்கல் விடுமுறையை கழிப்பதற்காக தனது குடும்பத்தினருடன் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தார்.
அங்குள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளி்ட்ட அனைத்து புராதன சின்னங்களையும் சுற்றி பார்த்த பிறகு மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து குடும்பத்துடன் தங்கி இருந்தார்.
அவருடைய மகள் ஜோஸ்னா அமுல்யா (வயது 8), அந்த நட்சத்திர ஓட்டலின் நீச்சல் குளம் அருகில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவர் கால் தவறி நீச்சல் குளத்தில் விழுந்து விட்டார். நீரில் மூழ்கிய அவர் மூச்சு திணறி உயிருக்கு போராடினார். அங்கு குளித்து கொண்டிருந்த சக பயணிகள், அந்த சிறுமியை மீட்டு அறையில் இருந்த அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அவரது தந்தை பிரேம் எட்வின் அங்கு வந்து மயக்க நிலையில் காணப்பட்ட தனது மகளை ஆம்புலன்ஸ் மூலம் மாமல்லபுரம் பூஞ்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், ஜோஸ்னா அமுல்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த மாமல்லபுரம் போலீசார் பலியான சிறுமி ஜோஸ்னா அமுல்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஓட்டலின் நீச்சல் குளம் அருகில் சிறுமி நீச்சல் குளத்தில் தவறி விழும் வரை எந்தவித பாதுகாப்பு பணியிலும் ஈடுபடாமல் மெத்தன போக்குடன் செயல்பட்டதாக கூறி நீச்சல் குள பராமரிப்பாளரான மாமல்லபுரத்தை அடுத்த நல்லூர் கிராமத்தை சேர்ந்த சுந்தரம்(39) என்பவரை கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சிறுமி ஜோஸ்னா அமுல்யா மப்பேடு பகுதியில் உள்ள மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். பெற்றோருடன் மகிழ்ச்சியுடன் விடுமுறை தினத்தை கழிக்க வந்த சிறுமி நீச்சல் குளத்தில் தவறி விழுந்து இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.