< Back
மாநில செய்திகள்
கள்ளக்காதலன் வீட்டுக்கு சென்ற போது விபரீதம்: 2 குழந்தைகளை கொடூரமாக கொன்ற வாலிபர் - காதலிக்கும் அரிவாள் வெட்டு
சென்னை
மாநில செய்திகள்

கள்ளக்காதலன் வீட்டுக்கு சென்ற போது விபரீதம்: 2 குழந்தைகளை கொடூரமாக கொன்ற வாலிபர் - காதலிக்கும் அரிவாள் வெட்டு

தினத்தந்தி
|
9 Feb 2023 1:19 PM IST

கள்ளக்காதலன் வீட்டுக்கு சென்றபோது 2 குழந்தைகள் கொடூரமாக கொன்று காதலியையும் அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பொன்னேரியை அடுத்த ஜெகனாதபுரம் கிராமத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த துவர்க்காபார் (வயது 30) என்பவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு சுமித்ராபார் (21) என்பவருடன் திருமணமான நிலையில் அவர்களுக்கு சிவா என்ற 4 வயது மகனும் ரீமா என்ற ஒரு வயது பெண் குழந்தையும் இருந்தனர்.

இந்த நிலையில் துவர்க்காபாருடன் வேலை பாா்த்து வந்த பீகாரை சேர்ந்த குட்டுலு (25) என்பவர் அவருடன் நட்பாக பழகி வந்தார். திருமணமாகாத குட்டுலு அதே பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி வந்த நிலையில் அடிக்கடி துவர்க்காபாரின் வீட்டுக்கு சென்று வந்தார்.

அப்போது துவர்க்காபாரின் மனைவி சுமித்ராபாருடன் குட்லுவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் துவர்க்காபாருக்கு தெரியாமல் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை பணி முடிந்து துவர்க்காபார் வீட்டுக்கு வந்தபோது மனைவி சுமித்ராபார் மற்றும் குழந்தைகள் வீட்டில் இல்லை. நீண்ட நேரமாக தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியாததால் அதிர்ச்சி அடைந்த துவர்க்காபார் அக்கம் பக்கத்தில் விசாரித்தார். அப்போது சுமித்ராபாரையும் குழந்தைகளையும் குட்டுலு அழைத்து சென்றதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து துவர்க்காபார் குட்டுலுவின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது கதவு வெளிப்புறம் பூட்டப்பட்டிருந்தது.

ஜன்னல் வழியாக பார்த்தபோது வீட்டுக்குள் மகன் சிவா, மகள் ரீமா ஆகியோர் முகத்தில் டேப் வைத்து சுற்றி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அருகே மனைவி சுமித்ராபார் வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

இதுகுறித்து சோழவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய சுமித்ராபாரை சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்த 2 குழந்தைகளையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் குட்டுலு சுமித்ராபாரையும், குழந்தைகளையும் கொன்றாரா? அல்லது உல்லாசத்துக்கு தொந்தரவாக இருந்த 2 குழந்தைகளையும் கொன்று விட்டு பின்னர் ஏற்பட்ட தகராறில் சுமித்ராபாரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்