< Back
மாநில செய்திகள்
தாம்பரம் அருகே சோகம்: ரூ.1 கோடி கடன் தொல்லையால் ஆசிரியை - கணவர் தற்கொலை
சென்னை
மாநில செய்திகள்

தாம்பரம் அருகே சோகம்: ரூ.1 கோடி கடன் தொல்லையால் ஆசிரியை - கணவர் தற்கொலை

தினத்தந்தி
|
15 July 2023 12:39 PM IST

ரூ.1 கோடி கடன் தொல்லையால் அவதிப்பட்ட பள்ளி ஆசிரியை தனது கணவருடன் சேர்ந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தாம்பரம் அருகே சோகத்தை ஏற்படுத்தியது.

சென்னை தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம், கல்யாண சுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் பொன்னுதாஸ் (வயது 48). இவர், திருமுடிவாக்கம் பகுதியில் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவருடைய மனைவி ஜான்சிராணி (45). இவர், குன்றத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

இவர்களுக்கு அபினேஷ் (18) என்ற மகனும், அனுசம்பிகா (13) என்ற மகளும் உள்ளனர். இவர்களில் அபினேஷ், என்ஜினீயரிங் கல்லூரியில் கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டும், அனுசம்பிகா தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் பள்ளி, கல்லூரிக்கு சென்ற மகன், மகள் இருவரும் மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் ஒரு அறையில் உள்ள மின்விசிறியில் தந்தை பொன்னுதாசும், தாய் ஜான்சிராணியும் தனித்தனியாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பெற்றோரின் உடல்களை பார்த்து இருவரும் கதறி அழுதனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி சிட்லபாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் மகுடீஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் கந்தவேல் மற்றும் போலீசார் தூக்கில் தொங்கிய 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்னுதாஸ், ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் நடத்துவதற்காக வங்கி மற்றும் தனக்கு தெரிந்த பலரிடம் சுமார் ரூ.1 கோடி வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் தவித்தார்.

இதற்கிடையில் கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து பணத்தை கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. உறவினர்களும் வாங்கிய கடனை திருப்பி கேட்டு அவர்களை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த பொன்னுதாஸ்-ஜான்சிராணி இருவரும் மகன், மகள் இருவரும் பள்ளி, கல்லூரிக்கு சென்ற பிறகு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ஒரே நேரத்தில் தாய்-தந்தையை இழந்து அவர்களுடைய மகன், மகள் இருவரும் பரிதவித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்