சென்னை
தாம்பரம் அருகே பரிதாபம்: வயதான தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
|தாம்பரம் அருகே வீட்டில் வயதான தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
தாம்பரம் அடுத்த சேலையூர், ராஜா அய்யர் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 73). இவரது மனைவி கங்காதேவி (63). இந்த தம்பதியினருக்கு ஜெயக்குமரன் என்ற மகன் உள்ளார். இவருக்கு திருமணமாகி ஆஷாதேவி என்ற மனைவி உள்ளார். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக ஒன்றாக வீட்டில் வசித்து வந்தனர்.
இதில் முதியவர் ஆனந்தன் கண் பார்வை குறைபாடால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அவரது மனைவி கங்காதேவி முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வயது முதிர்ந்த நிலையில், உடல்நிலை குறைபாடு காரணமாக தம்பதிகள் இருவரும் உறவினர்களை பார்க்க முடியாமலும், வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியாமலும் இருந்ததால் தொடர்ந்து மன உளச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, இவர்களது மகன் ஜெயக்குமரன் வழக்கம்போல நேற்று வேலைக்கு சென்று விட்ட நிலையில், மாலை அவர்களது மருமகள் ஆஷாதேவி குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வர சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த ஆனந்தன் மற்றும் கங்காதேவி இருவரும் வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த மருமகள் ஆஷாதேவி மாமனார், மாமியார் இருவரும் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சேலையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாதவரம் பொன்னியம்மன் மேடு முனுசாமி நகரை சேர்ந்தவர் சேட்டு (48). கொத்தனார். இவருடைய மனைவி சித்ரா (37). இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகளும், 16 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் சேட்டு வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததால், மனமுடைந்த சித்ரா வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து மாதவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மாதவரம் போலீசார் வழக்குபபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அதேபோல், சென்னை காசிமேடு பவர்குப்பம் பகுதியில் வசித்து வந்தவர் இந்திரா (58). இவர் கடந்த 11-ந் தேதி நள்ளிரவு வீட்டில் மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு தனக்கு தானே தீவைத்து கொண்டார். கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.