< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை அருகே பரிதாபம்: மின்சாரம் பாய்ந்து விவசாயி சாவு
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

புதுக்கோட்டை அருகே பரிதாபம்: மின்சாரம் பாய்ந்து விவசாயி சாவு

தினத்தந்தி
|
30 July 2023 12:00 AM IST

புதுக்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலியானார். அவரது உடல் மின்மாற்றியில் தொங்கியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விவசாயி

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மனப்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 78), விவசாயி. இவருக்கு திருமணமாகி 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று காலை 8 மணியளவில் இவரது தோட்டத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அதனை சரி செய்வதற்காக பொன்னமராவதி-மனப்பட்டி செல்லும் சாலையோரத்தில் உள்ள மின்மாற்றியில் முருகன் ஏறியுள்ளார்.

அப்போது மின் இணைப்பை துண்டிக்காமல் பீஸ் கட்டையை மாற்ற முயன்றதால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே முருகன் பரிதாபமாக இறந்தார். மேலும் அவரது உடல் மின்மாற்றியில் தொங்கி கொண்டு இருந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பிரேத பரிசோதனை

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் பொன்னமராவதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மின்வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு மின் இணைப்பை துண்டிக்கப்பட்டு முருகனின் உடல் கீழே இறக்கப்பட்டது. அதன்பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னமராவதி வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்