சென்னை
பூந்தமல்லி அருகே சோகம்: தண்ணீர் வாளியில் விழுந்து 1½ வயது குழந்தை பலி
|வீட்டில் இருந்த தண்ணீர் வாளியில் விழுந்து 1½ வயது பெண் குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ராகுல்குமார் பைகா (வயது 28). இவர், தனது குடும்பத்துடன் பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கம் பகுதியில் தங்கி, மெட்ரோ ரெயில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இவருக்கு 1½ வயதில் சந்திரிகா பைகா என்ற பெண் குழந்தை இருந்தது. நேற்று காலை ராகுல்குமார் பைகா, வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் அவரது மனைவி மற்றும் குழந்தை மட்டும் தனியாக இருந்தனர்.
மாலையில் ராகுல்குமார் பைகாவின் மனைவி வீட்டின் வெளியே நின்றிருந்தார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, தண்ணீர் வாளிக்குள் தனது 1½ வயது குழந்தை தலைகுப்புற மூழ்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக குழந்தையை மீட்டு பூந்தமல்லியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே நீரில் மூழ்கி இறந்து விட்டதாக தெரிவித்தனர். வீட்டில் தனியாக இருந்த குழந்தை, தண்ணீர் இருந்த வாளிக்குள் தவறி விழுந்ததில் மூச்சுத்திணறி இறந்தது தெரிந்தது. குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போலீசார், பலியான குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.