மதுரை
மதுரை ஒத்தக்கடை அருகே பரிதாபம் - கல்குவாரியில் மூழ்கி அக்காள், தங்கை சாவு - சமையல் வேலைக்கு வந்த இடத்தில் சோகம்
|மதுரை ஒத்தக்கடை அருகே சமையல் வேலைக்கு வந்த இடத்தில் கல்குவாரியில் மூழ்கி அக்காள், தங்கை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
மதுரை ஒத்தக்கடை அருகே சமையல் வேலைக்கு வந்த இடத்தில் கல்குவாரியில் மூழ்கி அக்காள், தங்கை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
சமையல் வேலைக்கு வந்தனர்
திண்டுக்கல் மாவட்டம் சிலுவத்தூர் வி.எஸ்.குரும்பபட்டியை சேர்ந்தவர் பழனியப்பன். இவருடைய மகள்கள் விஜயலட்சுமி (வயது 48), பூங்கொடி(45). இவர்களில் விஜயலட்சுமிக்கு திருமணம் ஆகவில்லை.
பூங்கொடிக்கு திருமணம் ஆகிவிட்டது. அவருடைய கணவர் சின்னையா. இவர்களுடைய மகன்கள் பகவதி(23), சத்யா(19). இவர்கள் அனைவரும் அதே ஊரில் வசித்து வந்தனர்.
விஜயலட்சுமியும், பூங்கொடியும் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு சென்று சமையல் செய்து கொடுக்கும் தொழில் செய்து வந்தனர்.
நேற்று முன்தினம் மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள சிதம்பரம்பட்டி கிராமத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சமையல் வேலைக்காக அவர்கள் இருவரும் வந்தனர். இதையொட்டி அதே பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி கும்பிட செல்ல திட்டமிட்டனர். இதற்காக அங்குள்ள கல்குவாரி குட்டையில் குளிக்க சென்றனர்.
அக்காள்-தங்கை பலி
இருவரும் குளித்து கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. நீச்சல் தெரியாததால் விஜயலட்சுமியும், பூங்கொடியும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். சிறிது நேரத்தில் அக்காள், தங்கை இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனா்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, நீண்ட நேரம் போராடி விஜயலட்சுமி, பூங்கொடியின் உடல்களை மீட்டனர்.
இதுகுறித்து அறிந்த ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, சப்-இன்ஸ்பெக்டர் சேது மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பலியானவர்களின் உடல்களை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமையல் வேலைக்கு வந்த இடத்தில் கல்குவாரியில் மூழ்கி அக்காள், தங்கை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.