< Back
மாநில செய்திகள்
குன்னம் அருகே பரிதாபம்: விஷம் குடித்த புதுப்பெண் சிகிச்சை பலனின்றி சாவு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

குன்னம் அருகே பரிதாபம்: விஷம் குடித்த புதுப்பெண் சிகிச்சை பலனின்றி சாவு

தினத்தந்தி
|
20 Aug 2023 6:30 PM GMT

குன்னம் அருகே விஷம் குடித்த புதுப்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, பெரம்பலூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

திருமணம்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பரவாய் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சரத்குமார். இவருக்கும், அதேபகுதி சமத்துவபுரம் ரோட்டை சேர்ந்த சின்ன தம்பியின் மகள் பட்டதாரியான மீராவுக்கும் (வயது 22) கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30-ந்தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின் போது மீராவின் பெற்றோர் சரத்குமாருக்கு வரதட்சணையாக நகையும், சீர்வரிசையாக வீட்டு உபயோக பொருட்களையும் கொடுத்துள்ளனர். திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் சரத்குமார் சவுதிக்கு வேலைக்கு சென்று விட்டார். இதையடுத்து மீரா தனது மாமனார் வீட்டில் வசித்து வந்தார். அப்போது குடும்பத்தகராறு ஏற்பட்டதால் மீராவை 5 மாதங்கள் கழித்து அவருடைய பெற்றோர் தங்களது வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

விஷம் குடித்து தற்கொலை

இந்த நிலையில் வெளிநாட்டில் உள்ள சரத்குமார் செல்போனில் மீராவை தொடர்பு கொண்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மீரா கடந்த 18-ந்தேதி காலை பெற்றோர் வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து மயங்கி கிடந்தார். இதனைக்கண்ட அவருடைய குடும்பத்தினர் மீராவை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி மீரா நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக மீராவின் பெற்றோர் குன்னம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்த மீராவுக்கு திருமணமாகி 10 மாதங்களே ஆவதால் பெரம்பலூர் ஆர்.டி.ஓ. நிறைமதி விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
மேலும் செய்திகள்