< Back
மாநில செய்திகள்
ஆவடி அருகே சோகம்: மகன் இறந்த துக்கம் தாங்காமல் பெற்றோர் தற்கொலை
சென்னை
மாநில செய்திகள்

ஆவடி அருகே சோகம்: மகன் இறந்த துக்கம் தாங்காமல் பெற்றோர் தற்கொலை

தினத்தந்தி
|
18 Nov 2022 10:13 AM IST

மகன் இறந்த துக்கம் தாங்காமல் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆவடி அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆவடியை அடுத்த பட்டாபிராம், கருணாகரச்சேரி, ராமாபுரம், நியூ தெருவைச் சேர்ந்தவர் தனசேகர் (வயது 51). விவசாய தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி பூங்கொடி (44). இவர்களுக்கு மவுனிகா (24) என்ற மகள் உள்ளார். அவர், திருமணமாகி கணவன் மற்றும் 2 வயது மகனுடன் அருகில் உள்ள ஆயில்சேரி பகுதியில் வசித்து வருகிறார்.

தனசேகர்-பூங்கொடி தம்பதிக்கு ஹரிஷ் (17) என்ற மகனும் இருந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19-ந்தேதி உடல் நலக்குறைவால் திடீரென ஹரிஷ் உயிரிழந்தார். அதன்பிறகு தனசேகர், தனது மனைவி பூங்கொடி மற்றும் அவரது தாயார் பூங்காவனம் (70) ஆகியோருடன் வீட்டில் வசித்து வந்தார்.

மகன் இறந்த நாள் முதல் தனசேகர், பூங்கொடி இருவரும் தங்களது மகள், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம், "எங்கள் மகனே எங்களை விட்டு போய்விட்டான். இனிமேல் நாங்கள் மட்டும் உயிருடன் இருந்து என்ன பயன்?. நாங்கள் ஏன் உயிருடன் இருக்க ேவண்டும். நாங்களும் செத்து விடுகிறோம்" என அடிக்கடி புலம்பி வந்தனர். இவர்களுக்கு மகள் மற்றும் உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.

நேற்று முன்தினம் மாலை மவுனிகா குடும்பத்துடன் காஞ்சீபுரம் அடுத்த கூத்தம்பாக்கம் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது மவுனிகாவிடம் செல்போனில் பேசிய தனசேகர், "அடுத்த மாதம் ஹரிசுக்கு முதலாம் ஆண்டு நினைவு நாள் வரப்போகிறது" என்று கூறி வழக்கம்போல் மகன் இறந்த துக்கம் தாங்காமல் மகளிடம் புலம்பினார்.

பின்னர் இரவில் தனசேகர், பூங்கொடி இருவரும் வீட்டில் சாப்பிட்டுவிட்டு ஹாலில் அமர்ந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். அவருடைய தாயார் பூங்காவனம், வீட்டின் வெளியில் படுத்து தூங்கினார்.

நேற்று காலை பூங்காவனம் எழுந்து பார்த்தபோது தனது மகன் தனசேகர் மற்றும் மருமகள் பூங்கொடி இருவரும் வாயில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த பட்டாபிராம் போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது அவர்களது உடல்களுக்கு அருகில் குளிர்பான பாட்டில் மற்றும் பூச்சி மருந்து பாட்டில்(விஷம்) கிடந்தது. எனவே மகன் இறந்த துக்கம் தாங்காமல் தனசேகர் மற்றும் பூங்கொடி இருவரும் குளிர்பானத்தில் பூச்சி மருந்தை கலந்து குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் இறந்த துக்கம் தாங்காமல் பெற்றோர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்