சென்னை
விருகம்பாக்கத்தில் சோகம்: தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த ஒரு வயது குழந்தை சாவு
|தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த ஒரு வயது குழந்தை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் விருகம்பாக்கத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சென்னை விருகம்பாக்கம், ராஜேஸ்வரி காலனியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 39). இவருக்கு 6 வயதில் இரட்டை குழந்தைகள் உள்ளது. மேலும் ஒரு வயதில் இளமாறன் என்ற ஆண் குழந்தையும் இருந்தது.
சம்பவத்தன்று வீட்டில் உள்ள அனைவரும் டி.வி. பார்த்துக்கொண்டிருந்தனர். குழந்தை இளமாறன், வீட்டின் கழிவறை படிக்கட்டில் இருந்த தண்ணீர் வாளியில் இருந்த தண்ணீரில் விளையாடிக்கொண்டிருந்தது.
சிறிது நேரத்துக்கு பிறகு அவரது தாய் சென்று பார்த்தபோது, தண்ணீர் வாளிக்குள குழந்தை இளமாறன் நீரில் மூழ்கிய நிலையில் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக குழந்தையை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை இளமாறன் ஏற்கனவே தண்ணீர் வாளிக்குள் விழுந்ததில் நீரில் மூழ்கி மூச்சுத்திணறி இறந்து விட்டதாக தெரிவித்தனர். குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த விருகம்பாக்கம் போலீசார், பலியான குழந்தை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பலியான குழந்தை இளமாறனுக்கு, 2 நாட்களுக்கு முன்புதான் முதலாவது பிறந்த நாளை கொண்டாடினர். பிறந்த நாள் கொண்டாடிய 2 நாளில் குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.