திருவள்ளூர்
திருத்தணியில் சோகம்: விஷம் குடித்து விவசாயி தற்கொலை
|வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த திருத்தணியை சேர்ந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் வீரகநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் தாஸ் (வயது 44). விவசாயி. பயிர் சாகுபடி இல்லாத நேரங்களில் கூலி வேலைக்கு சென்றுள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த சில ஆண்டுகளாகவே தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த மாதம் 25-ந் தேதி தாசுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. வலியை தாங்கி கொள்ள முடியாமல் தாஸ் கதறி துடித்தார்.
இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் பயிர்களுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிமருந்தை (விஷம்) குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் தாசை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி தாஸ் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருத்தணி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.