< Back
மாநில செய்திகள்
மாதவரத்தில் விபரீதம்: தெருவில் நடந்துபோன வாலிபர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது - ரியல் எஸ்டேட் தரகர் கைது
சென்னை
மாநில செய்திகள்

மாதவரத்தில் விபரீதம்: தெருவில் நடந்துபோன வாலிபர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது - ரியல் எஸ்டேட் தரகர் கைது

தினத்தந்தி
|
8 Jan 2023 12:35 PM IST

மாதவரத்தில் தெருவில் நடந்துபோன வடமாநில வாலிபர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக ரியல் எஸ்டேட் தரகர் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

வடமாநிலத்தை சேர்ந்தவர் சென்ரூட்க் (வயது 31). இவர் சென்னை அடுத்த மாதவரம் பால் பண்ணை பெரிய சேக்காடு குள்ள கோவிந்தன் தெருவில் தங்கியிருந்து கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை அந்த பகுதியில் உள்ள தெருவில் நடந்து சென்றார். அப்போது திடீரென அவரது வலது கையில் ஏதோ தாக்கி ரத்தம் பீறிட்டது. இதனால் நிலைகுலைந்து போன அவர், தடுமாறி கீழே விழுந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதில் கையில் பாய்ந்தது துப்பாக்கி குண்டு என்பது தெரியவந்தது.

இது தொடர்பாக மாதவரம் பால் பண்ணை இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தரகரான லாரன்ஸ் (35) என்பவரை கைது செய்தனர். அவர் ஏர்கன்னால் பறவையை வேட்டையாடிய போது குறி தவறி வடமாநில வாலிபர் மீது குண்டு பாய்ந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரன்சிடம் இருந்து ஏர்கன் பறிமுதல் செய்யப்பட்டு, தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்