சென்னை
சென்னை அரும்பாக்கத்தில் சோகம்: ஒரே குடும்பத்தில் 3 பேர் விஷம் குடித்து தற்கொலை
|சென்னை அரும்பாக்கத்தில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தில் 3 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சென்னை அரும்பாக்கம், ஜானகிராமன் காலனியை சேர்ந்தவர் கோபாலசாமி (வயது 65). இவர், ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவ கல்லூரியில் கேண்டின் வைத்து நடத்தி வந்தார். இவருடைய மனைவி பானுமதி (55). இவர்களுடைய மகன் கண்ணபிரான் (38). இவர், கம்ப்யூட்டர் சாப்ட்வேர் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.
நேற்று மாலை இவர்களது வீடு நீண்டநேரமாக பூட்டியே கிடந்தது. அவரது வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. இதற்கிடையில் கண்ணபிரான் தனது நண்பர்களுக்கு "இந்த உலகில் வாழ பிடிக்கவில்லை" என 'வாட்ஸ்அப்'பில், "வாய்ஸ் மெசேஜ்" அனுப்பி இருந்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த நண்பர்கள், அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் செல்போனை எடுக்கவில்லை. இதனால் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தனர்.
கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது கோபாலசாமி, பானுமதி, கண்ணபிரான் ஆகிய 3 பேரும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த அரும்பாக்கம் போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று இறந்து கிடந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
கண்ணபிரான், சமீபத்தில் கடன் வாங்கி இந்த வீட்டை கட்டினார். இதனால் அவர்களுக்கு கடன் பிரச்சினை அதிக அளவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கண்ணபிரானின் மனைவி வித்யா, கருத்து வேறுபாடு காரணமாக 4 மாதங்களுக்கு முன்பு கணவரை விட்டு பிரிந்து தனது 2 மாத கைக்குழந்தையுடன் பெங்களூருவில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டதாகவும், கண்ணபிரான் போன் செய்தால் கூட எடுக்காமல் இருந்ததாகவும் தெரிகிறது.
கைக்குழந்தையுடன் மனைவி பிரிந்து சென்ற சோகம், கடன் தொல்லை ஆகியவற்றால் மன உளைச்சலில் இருந்து வந்த 3 பேரும் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் தற்கொலைக்கு முன்பு கண்ணபிரான் எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது. அதில் அவர், "எங்களுக்கு கடன் பிரச்சினை இருப்பதால் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை" என்று எழுதி இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
அத்துடன் கண்ணபிரான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக "வீட்டில் கம்ப்யூட்டர் சாப்ட்வேர், லேப்டாப் உள்ளது. அதனை தேவைப்படும் நண்பர்கள் எடுத்து கொள்ளலாம்" என அவரது நண்பர்களுக்கு 'வாட்ஸ் அப்'பில் தகவல் அனுப்பியதும் தெரியவந்தது.
சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களது தற்கொலைக்கு வேறு ஏதும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.