< Back
மாநில செய்திகள்
ஆழ்வார்ப்பேட்டையில் பரிதாபம்: உடல் பற்றி எரிந்த நிலையில் 3-வது மாடியில் இருந்து விழுந்த பெண் பலி - தூத்துக்குடியை சேர்ந்தவர்
சென்னை
மாநில செய்திகள்

ஆழ்வார்ப்பேட்டையில் பரிதாபம்: உடல் பற்றி எரிந்த நிலையில் 3-வது மாடியில் இருந்து விழுந்த பெண் பலி - தூத்துக்குடியை சேர்ந்தவர்

தினத்தந்தி
|
22 Dec 2022 1:06 PM IST

உடலில் தீப்பிடித்து எரிந்த நிலையில் 3-வது மாடியில் இருந்து விழுந்த தூத்துக்குடியை சேர்ந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

சென்னை ஆழ்வார்பேட்டை சீதாம்மாள் 1-வது தெருவில் அன்னை ஆதரவற்ற முதியோர் இல்லம் மற்றும் பிருந்தாவனம் ஆதரவற்றவர்களுக்கான மீட்பு மையம் இயங்கி வருகிறது.

6 முதியவர்கள் வசிக்கும் இந்த முதியோர் இல்லத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயந்தி(வயது 34) என்பவர் கடந்த 10 மாதங்களாக வேலை பார்த்து வந்தார். கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ஜெயந்தி, முதியோர் இல்லத்தில் தங்கி சமையல் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் 3-வது மாடியில் உள்ள சமையலறைக்கு நேற்று மாலை ஜெயந்தி காபி போட சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் அணிந்திருந்த சேலையில் தீப்பிடித்தது. தீயை அணைக்க ஜெயந்தி முயற்சி செய்தார். ஆனால் அதற்குள் தீ மளமளவென அவரது உடல் முழுவதும் பரவியது.

இதனால் வலி பொறுக்க முடியாமல் அலறிக்கொண்டே அங்கும் இங்குமாக ஓடிய ஜெயந்தி, 3-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் ஜெயந்தியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உடலில் 80 சதவீதம் தீக்காயத்துடன் உயிருக்கு போராடிய ஜெயந்தி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுதொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்