< Back
மாநில செய்திகள்
திருமணமான 5 மாதத்தில் சோகம்: புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது
சென்னை
மாநில செய்திகள்

திருமணமான 5 மாதத்தில் சோகம்: புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது

தினத்தந்தி
|
4 Jun 2022 2:32 PM IST

திருமணமான 5 மாதத்தில் புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்ெகாலை செய்து கொண்டனர். அவர்கள் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அடுத்த மடத்திவிளையை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 22). இவர், மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், தனலட்சுமி நகரில் தங்கி பழைய இரும்பு கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி ஆர்த்தி (20). இவர்களுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு பிறகு புதுமண தம்பதிகள், மதுரவாயலில் தனியாக வசித்து வந்தனர். நேற்று காலை இவரது உறவினர்கள் செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றனர். நீண்டநேரம் ஆகியும் கணவன்-மனைவி இருவரும் செல்போனை எடுக்கவில்லை.

இதனால் அதே பகுதியில் உள்ள உறவினர்கள் மூலம் நேரில் சென்று பார்க்கும்படி கூறினர். அதன்படி உறவினர்கள் கடைக்கு சென்று பார்த்தபோது, கடை திறக்கப்படவில்லை. வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீட்டின் கதவும் பூட்டி இருந்தது. நீண்டநேரம் தட்டிப்பார்த்தும் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். வீட்டின் உள்ளே சக்திவேல்-அவருடைய மனைவி ஆர்த்தி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கணவன்-மனைவி இருவரது உடலையும் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார், அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது தற்கொலைக்கு முன்பாக கணவன்-மனைவி இருவரும் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில், "எங்கள் தாம்பத்ய வாழ்க்கையில் சிக்கல் இருப்பதால் எங்களால் குழந்தை பெற முடியாதோ? என்ற ஏக்கத்தில் நாங்கள் தற்கொலை செய்கிறோம். எங்கள் சாவில் யாருக்கும் தொடர்பு இல்லை" என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமான 5 மாதத்தில் புதுமண தம்பதி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்