சென்னை
ஒருதலை காதலால் விபரீதம்: இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை - தற்கொலை என நாடகமாடிய வாலிபர் கைது
|சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் ஒருதலை காதல் விவகாரத்தால் இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை அய்யா முதலி தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 21). இவர், 'சென்னை போலீஸ் அவசர கட்டுப்பாட்டு அறையை செல்போனில் தொடர்புக்கொண்டு தன்னுடன் தங்கியிருந்த மஞ்சுளா என்ற பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்த அவரை நான் மின் விசிறியில் இருந்து இறக்கினேன். பயத்தில் நான் வீட்டை விட்டு வெளியேறி ஸ்ரீபெரும்புதூருக்கு வந்துவிட்டேன்' என்று கூறினார்.
இதுதொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். இறந்து கிடந்த பெண்ணின் உடலில் காயங்கள் இருந்தன. இதையடுத்து அவரது சாவில் போலீசார் சந்தேகம் அடைந்தனர். அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜாராம் விசாரணையை தொடங்கினார். சந்தோஷ்குமாரை பிடித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்த நேரத்தில் அவரே போலீசில் ஆஜரானார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மஞ்சுளாவை கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகம் ஆடியது வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-
கொலை செய்யப்பட்ட மஞ்சுளாவுக்கு வயது 23. இவருடைய சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் பேராவூரணி சோளக்காடு வெள்ளக்கோவில் ஆகும். பாலிடெக்னிக் படித்தவர். சந்தோஷ்குமாரின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சின்ன அண்ணாநகர் எல்லன்புரம் ஆகும்.
அறந்தாங்கியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மஞ்சுளாவும், சந்தோஷ்குமாரும் ஒன்றாக வேலை பார்த்துள்ளனர். அப்போது அவர்கள் 2 பேரும் நட்பாக பழகி உள்ளனர். இந்த நிலையில் சந்தோஷ்குமார், மஞ்சுளா இருவருக்கும் சென்னையில் உள்ள வெவ்வேறு நிறுவனங்களில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வேலை கிடைத்துள்ளது.
இருவரும் சென்னை சிந்தாதிரிப்பேட்டை அய்யா முதலி தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். சந்தோஷ்குமார், மஞ்சுளாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் மஞ்சுளா தன்னுடன் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து, தற்போது பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் அய்யப்பன் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
எனவே அய்யப்பனுடன் அவர் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளார். இது சந்தோஷ்குமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி வந்துள்ளது. இதுதொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று மதுபோதையில் சந்தோஷ்குமார் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மஞ்சுளா செல்போனில் பேசுவதை பார்த்து கோபம் அடைந்துள்ளார். இதையடுத்து மஞ்சுளாவை தாக்கி அவரது கழுத்தை கையாலும், துப்பட்டாவாலும் நெரித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் தற்கொலை நாடகத்தை அரங்கேற்றி தப்பித்துவிடலாம் என்று கருதி உள்ளார். ஆனால் விசாரணைக்கு பயந்து உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். விசாரணைக்கு பின்னர் சந்தோஷ்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.