விழுப்புரம்
வயல்வெளி வழியாக இறந்தவரின் உடலை எடுத்து செல்லும் அவலம்
|விழுப்புரம் அருகே மயானத்துக்கு பாதை வசதி இல்லாததால் வயல்வெளி வழியாக இறந்தவரின் உடலை எடுத்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே ஆரியூர் ஊராட்சிக்கு உட்பட்ட சாணிமேடு கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்கு யாரேனும் இறந்தால் அவர்களின் உடலை அதே பகுதியில் வயல்வெளி மத்தியில் உள்ள மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்து வருகின்றனர். இந்த மயானத்துக்கு செல்ல கிராமத்தில் இருந்து சிறிது தூரம் மட்டுமே சாலை வசதி உள்ளது. அதன்பிறகு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பாதை வசதி இல்லை. இதனால் இறந்தவர்களின் உடலை அங்குள்ள வயல்வெளி பகுதியாக தூக்கிச்சென்று அடக்கம் செய்து வருகின்றனர். அவ்வாறு செல்லும் போது சில நேரங்களில் சேற்றில் சிக்கி இறந்தவரின் உடலோடு கீழே விழுந்து வருகின்றனர். இந்த அவல நிலையை போக்க மயானத்துக்கு செல்ல பாதைவசதி கேட்டு பல முறை பொதுமக்கள் புகார் அளித்தும் இது வரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த முத்துசாமி (65) என்பவர் உடல்நலக்குறைவாக இறந்தார். மயானத்துக்கு பாதை வசதி இல்லாததால், அவரின் உடலை உறவினர்கள் விளைநிலங்கள் வழியாக பெரும் சிரமப்பட்டு மயானத்துக்கு .எடுத்து சென்று அடக்கம் செய்தனர். இதை தவிர்க்க மயானத்துக்கு மாற்றுப்பாதை அமைத்து தரவேண்டும். இல்லையெனில் மயானத்தை வேறு இடத்துக்கு மாற்றி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.