< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டையில் குட்டையில் குளிக்க சென்ற 2 குழந்தைகளுக்கு நேர்ந்த துயரம்
மாநில செய்திகள்

ராணிப்பேட்டையில் குட்டையில் குளிக்க சென்ற 2 குழந்தைகளுக்கு நேர்ந்த துயரம்

தினத்தந்தி
|
25 Aug 2024 10:51 AM IST

குட்டையில் மூழ்கி அண்ணன்-தங்கை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி பேரூராட்சிக்கு உட்பட்ட புன்னை ஆதிதிராவிடர் காலனி பகுதியை சேர்ந்தவர் பரமசிவம், கூலித்தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று பள்ளி விடுமுறை தினம் என்பதால் பரமசிவத்தின் 3 குழந்தைகளும் அருகில் உள்ள குட்டையில் குளிக்க சென்றனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக தினேஷ், சுப்ரியா ஆகிய இருவரும் நீரில் மூழ்கியதை கண்ட மூன்றாவது மகன் ரஞ்சித் தன் தந்தையிடம் ஓடி சென்று நடந்ததை கூறி அழைத்து சென்றான். ஆனால் அவர்கள் வருவதற்குள் அண்ணன்-தங்கை இருவரும் நீரில் மூழ்கிவிட்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பரமசிவம் கூச்சலிட்டு கதறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து தண்ணீரில் மூழ்கி பலியான அண்ணன்-தங்கையை பிணமாக மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த நெமிலி போலீசார் குழந்தைகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குட்டையில் மூழ்கி அண்ணன்-தங்கை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்