< Back
மாநில செய்திகள்
சென்னை வந்த ஆந்திரா கார் டிரைவருக்கு நேர்ந்த சோகம்: அரசு டாக்டர் என்று கூறி பணம், செல்போனை அபேஸ் செய்த பலே மோசடி ஆசாமி
மாநில செய்திகள்

சென்னை வந்த ஆந்திரா கார் டிரைவருக்கு நேர்ந்த சோகம்: அரசு டாக்டர் என்று கூறி பணம், செல்போனை 'அபேஸ்' செய்த பலே மோசடி ஆசாமி

தினத்தந்தி
|
16 July 2023 2:46 AM IST

சென்னைக்கு வந்த ஆந்திரா கார் டிரைவரிடம் பணம், செல்போனை ‘அபேஸ்' செய்த பலே மோசடி ஆசாமி கைது செய்யப்பட்டார்.

டிப்-டாப்' உடையில் நூதன மோசடி

ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரபல தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் என்று கூறி சஞ்சய் சர்மா (வயது 44) என்பவர் கடந்த 8-ந்தேதி வாடகைக்கு கார் முன்பதிவு செய்தார். இதையடுத்து திருப்பதி மாவட்டத்தை சேர்ந்த கார் டிரைவர் தினேஷ்குமார் (24), சஞ்சய் சர்மாவை செல்போனில் தொடர்புக்கொண்டு பேசினார்.

அப்போது அவரிடம், 'சென்னைக்கு வந்து தன்னை ஏற்றிக்கொண்டு ஆந்திராவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்ல வேண்டும். உங்களை தனியாக கவனித்து விடுகிறேன்' என்று கூறினார். இதனால் உற்சாகம் அடைந்த தினேஷ்குமார், ஆந்திராவில் இருந்து சென்னைக்கு காரை ஓட்டி வந்தார். அவரை, சஞ்சய் சர்மா கோடம்பாக்கத்தில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிடுவதற்கு அழைத்துச்சென்றார். அங்கு சஞ்சய் சர்மா மது அருந்தினார். அப்போது தினேஷ்குமாரிடம் அவசர தேவை என்றுக்கூறி 'கூகுள் பே' மூலம் ரூ.8 ஆயிரம் பெற்றார். சஞ்சய் சர்மா 'டிப்-டாப்' உடையில் இருந்ததாலும், டாக்டர் தானே என்ற நம்பிக்கையிலும் அவரும் பணத்தை உடனே அனுப்பி விட்டார். பின்னர் தனது செல்போனில் 'சார்ஜ்' இல்லை என்று கூறி தினேஷ்குமாரின் செல்போனை வாங்கி, வெளியே சென்று பேசிவிட்டு வருவதாக சஞ்சய் சர்மா சென்றார். ஆனால் அவர் திரும்பி வரவில்லை.

கைது

இதற்கிடையே பார் ஊழியர்கள் தினேஷ்குமாரிடம் சஞ்சய் சர்மா அருந்திய மதுவுக்கு பணம் வாங்கிவிட்டு அவரை வெளியே அனுப்பினார்கள். இந்த சூழ்நிலையில், பணம் மற்றும் செல்போனை பறிகொடுத்த தினேஷ்குமார், கோடம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். இதையடுத்து கோடம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அந்த பாரில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் சஞ்சய் சர்மாவை அடையாளம் கண்டனர். அவர் விருகம்பாக்கம் சித்திரை தெருவைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து சஞ்சய் சர்மா கைது செய்யப்பட்டார்.

கள்ளநோட்டுகள்

விசாரணையில் இவர், இதே பாணியில் கோயம்பேடு பகுதியில் கடந்த மாதம் கார் டிரைவர் ஒருவரிடம் டாக்டர் என்று கூறி காரை வாடகைக்கு எடுத்து கள்ள நோட்டுகளை கொடுத்து பணம், செல்போனை பறித்து சென்றதும் தெரியவந்தது.

மேலும் இவர், சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் போல் நடித்து சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் 6 பவுன் நகைகளை 'அபேஸ்' செய்ததும் தெரிய வந்தது. இவரிடம் ஏராளமான போலி அடையாள அட்டைகள் இருந்துள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் என்ற முகவரியில் ஆதார் அட்டையும் இருந்தது. கேரளாவில் இதே போன்று மோசடியில் ஈடுபட்டு அம்மாநில போலீசாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் செய்திகள்