< Back
மாநில செய்திகள்
அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பரிதாபம்: விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் மின்சாரம் தாக்கி சாவு
சென்னை
மாநில செய்திகள்

அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பரிதாபம்: விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் மின்சாரம் தாக்கி சாவு

தினத்தந்தி
|
16 April 2023 11:44 AM IST

அம்பத்தூர் அருகே அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் முடிவில் கொடிக்கம்பங்களை அகற்றியபோது விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியானார்.

அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அம்பத்தூர் அடுத்த பட்டரைவாக்கம் பொன்னியம்மன் கோவில் அருகே உள்ள மைதானத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், விழா முடிந்ததும் கட்சியின் இளைஞர் அணி தொண்டர்கள் பேனர்கள் மற்றும் மேடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகரும், மண்ணூர்பேட்டையை சேர்ந்த ஐ.டி ஊழியருமான டில்லி பாபு (வயது 25) என்பவர் அங்கிருந்த கொடி கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது.

அப்போது மேலே சென்ற மின்சார கம்பியில் கொடி கம்பம் உரசியதால் திடீரென மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் சுருண்டு விழுந்த டில்லிபாபுவை அங்கு இருந்தவர்கள் மீட்டு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், டில்லிபாபு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த டில்லிபாபுவின் பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு சென்று மகனின் உடலை பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. இந்த விபத்து குறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையடுத்து பலியான கட்சி பிரகமுகர் டில்லிபாபு உடலுக்கு விடுதலை சிறுத்தைகட்சி தலைவர் திருமாவளவன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

மேலும் செய்திகள்