< Back
மாநில செய்திகள்
கனிம வளங்கள் கடத்துவதை தடுக்க வேண்டும்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

கனிம வளங்கள் கடத்துவதை தடுக்க வேண்டும்

தினத்தந்தி
|
4 July 2023 2:00 AM IST

கோவையில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்துவதை தடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பா.ஜனதாவினர் மனு அளித்தனர்.

கோவை

கோவையில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்துவதை தடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பா.ஜனதாவினர் மனு அளித்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாவட்ட மக்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யும் வகையில் திங்கட்கிழமைதோறும் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று நடந்த கூட்டத்துக்கு கலெக்டர் கிராந்திகுமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுத்தனர். அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

கனிமவளம் கடத்தல்

அதில், பா.ஜனதா கோவை தெற்கு மாவட்ட தலைவர் கே.வசந்தராஜன் தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவையில் உள்ள 130-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள், 250-க்கும் மேற்பட்ட கிரஷர் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். எனவே பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் கடந்த 2 ஆண்டாக ஒரு கோடி யூனிட் அளவுக்கு கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்பட்டு உள்ளது. இதனால் கோவை வறட்சியின் பிடியில் சிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே கனிமவள கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

சாதி, மத விவரங்கள்

திராவிடர் விடுதலை கழகத்தினர் கொடுத்த மனுவில், கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள், மாணவர்களின் வீட்டுப்பாட விவர குறிப்பேட்டில் சாதி, மத விவரங்களை குறிப்பிடும்படி கட்டாயப்படுத்துகிறார்கள். இது மாணவர்களிடையே பாகுபாடு உணர்வுகளை தூண்டும். இதை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

கோவை மாநகராட்சி 26-வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி கொடுத்த மனுவில் அவினாசி ரோடு, விளாங்குறிச்சி ரோடு, பயனீர்மில் ரோடு பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்காததால் மழை காலத்தில் மழைநீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகிறது. எனவே இங்கு உடனடியாக மழை நீர் வடிகால் அமைக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

7 ஆண்டாக திறக்கவில்லை

கிணத்துக்கடவு தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கொடுத்த மனுவில், வெள்ளலூர் அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகிறார்கள். இந்த மக்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிக்கூடம், திருமண மண்டபம் போன்ற கட்டிடங்கள் கட்டப்பட்டது. ஆனால் 7 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்பட்டவில்லை.

இந்த கட்டிடங்களில் சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது. எனவே விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்