< Back
மாநில செய்திகள்
தாய்லாந்து நாட்டில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் 12 மலைப்பாம்பு குட்டிகள் பறிமுதல்
சென்னை
மாநில செய்திகள்

தாய்லாந்து நாட்டில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் 12 மலைப்பாம்பு குட்டிகள் பறிமுதல்

தினத்தந்தி
|
6 Sept 2023 2:39 PM IST

தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வரப்பட்ட 12 மலைப்பாம்பு குட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது சென்னையை சேர்ந்த 27 வயது வாலிபர் மீது சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவரை நிறுத்தி விசாரித்ததில், அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது அவரது உடைமைகளில் இருந்த கூடையில் லேசாக அசைவது போல் தெரிந்தது. இதையடுத்து சுங்க இலாக அதிகாரிகள் திறந்து பாா்த்தபோது, அதில் காடுகளில் வாழும் அரிய வகை மலைப்பாம்பு குட்டிகள் இருப்பதை கண்டனர்.

இதுதொடர்பாக பயணியிடம் விசாரித்தநிலையில், அவற்றை மருத்துவ பரிசோதனை செய்து நாட்டுக்குள் கொண்டு வருவதற்கான அனுமதியுடன் கூடிய முறையான ஆவணங்கள் அவரிடம் இல்லாதது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, எந்தவிதமான சான்றிதழ்களும் இல்லாமல் கொண்டு வந்த 12 வகை அரியவகை மலைப்பாம்பு குட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பின்னர் சென்னையில் உள்ள மத்திய வனவிலங்கு குற்றப்பிரிவு துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, அவர்களின் ஆய்வு முடிந்து அவர்களது அறிவுறுத்தலின் பேரில், 12 மலைப்பாம்பு குட்டிகளையும் மீண்டும் தாய்லாந்து நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்