போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக யூ-டியூபர் அளித்த புகார் - விசாரணையில் பைக் திருடர்கள் சிக்கிய சம்பவம்
|போக்குவரத்து விதிமீறல் புகார் தொடர்பான விசாரணையில், பைக் திருடர்கள் சிக்கியிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை,
சென்னை பெருநகர காவல்துறைக்கென்று பிரத்யேகமாக பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்கள் இயங்கி வருகின்றன. இந்த சமூக வலைதள பக்கங்களில் பொதுமக்கள் தாமாக முன்வந்து குற்ற சம்பவங்கள், போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான தகவல்களை தெரிவிக்கலாம் என ஏற்கனவே கூறப்பட்டிருந்தது.
இதன்படி தொடர்ந்து சமீப காலமாக சமூக வலைதளங்களில் காவல்துறையை டேக் செய்து, பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 4-ந்தேதி பிரபல பெண் யூ-டியூபர் ஒருவர், சென்னையில் சிறுவர்கள் 3 பேர் இருசக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் பயணித்தது தொடர்பான வீடியோவை பகிர்ந்து காவல்துறை நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வீடியோவை போலீசார் ஆய்வு செய்த போது, அந்த வீடியோவில் சிறுவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம் கடந்த மாதம் சென்னை பரங்கிமலை பகுதியில் திருடப்பட்ட வாகனம் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சி.சி.டி.வி. ஆதாரங்களின் அடிப்படையில் இந்த திருட்டில் ஈடுபட்ட 3 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
அந்த சிறுவர்களிடம் நடத்திய விசாரணையில், இதே போல திருமங்கலம் பகுதியில் மற்றொரு இருசக்கர வாகனத்தையும் அவர்கள் திருடியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், அந்த சிறுவர்களை சென்னை கெல்லீசில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் இந்த வீடியோவை பகிர்ந்த பெண் யூ-டியூபருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்துள்ளனர். போக்குவரத்து விதிமீறல் என்ற அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில், பைக் திருடர்கள் சிக்கியிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.