கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர் தரைப்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்
|தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதையொட்டி திருக்கோவிலூர் தரைப்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
திருக்கோவிலூர்
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூரில் அணை திறக்கப்பட்டதன் காரணமாக திருக்கோவிலூர் தென்பெண்ணையாற்றில் தற்போது நீர்வரத்து பரவலாக காணப்படுகிறது. திருக்கோவிலூர் பகுதியில் பெய்த மழையின் காரணமாக ஏற்கனவே சுமார் 500 கன அடி அளவிற்கு தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த நிலையில் சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,570 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் தற்போது நீர் வரத்து 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருக்கோவிலூர் கீழையுரையும்-விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரையும் இணைக்கும் தரைப்பாலத்தின் இருபக்கமும் பொதுப்பணித்துறையினர் தடுப்புகள் ஏற்படுத்தி போக்குவரத்து தடை ஏற்படுத்தியுள்ளனர். மேலும் அங்கு திருக்கோவிலூர் மற்றும் அரகண்டநல்லூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதையொட்டி அந்தந்த பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் வகையில் ஆற்று நீரை மடைமாற்றம் செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.