< Back
மாநில செய்திகள்
கரூர் நகரப்பகுதிகளில் விதிகளை மீறும் மினி பஸ்களால் போக்குவரத்து நெரிசல்
கரூர்
மாநில செய்திகள்

கரூர் நகரப்பகுதிகளில் விதிகளை மீறும் மினி பஸ்களால் போக்குவரத்து நெரிசல்

தினத்தந்தி
|
6 Oct 2022 7:11 PM GMT

கரூர் நகரப்பகுதிகளில் விதிகளை மீறும் மினி பஸ்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

விதிகளை மீறும் மினி பஸ் டிரைவர்கள்

கரூரில் போக்குவரத்து போலீசார் உத்தரவை மதிக்காமல் மினி பஸ்கள் இயக்கப்படுவதால் தீபாவளி பண்டிகை வர இருக்கும் இந்த நேரத்தில் கரூர் மாநகரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. கரூர் மினி பஸ் ஸ்டாண்டில் இருந்து தினந்தோறும் 30 - க்கும் மேற்பட்ட மினி பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. ஏற்கனவே கரூர் மினி பஸ் நிலையம் போதிய இடவசதி இல்லாமல் தினந்தோறும் போக்குவரத்து நெருக்கடிக்கு ஆளாகிறது. இதற்கிடையே பேருந்துநிலையம் அருகே உள்ள மனோகரா கார்னர், உழவர் சந்தை,லைட்ஹவுஸ் கார்னர் போன்ற பகுதிகளில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

இந்த நிலையில் கரூர் பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் ஒரு சில மினி பஸ் டிரைவர்கள் நினைத்த இடத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்கின்றனர். இதனால் பின்னால் வரும் வாகனங்கள் வரிசையாக நிற்பதால் கூடுதலாக நெரிசல் ஏற்பட்டு வாகன போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் மினி பஸ்களை நிறுத்தமில்லாத இடங்களில் நிறுத்தக்கூடாது என போக்குவரத்து போலீசார் பலமுறை எச்சரித்தும் மினி பஸ் டிரைவர்கள் அதனை கண்டு கொள்ளாமல் செயல்படுகின்றனர்.

போக்குவரத்து நெரிசல்

வருகிற 24-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் புத்தாடைகள், நகைகள் மற்றும் பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் வாங்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கரூர் ஜவஹர் பஜார், மனோகரா கார்னர், கரூர் - கோவை ரோடு போன்ற பகுதிகளுக்கு வருகின்றனர். ஏற்கனவே இந்த பகுதியில் உள்ள சில வர்த்தக நிறுவனங்களுக்கு வருபவர்கள் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சாலையில் நிறுத்திவிட்டு பல மணி நேரம் கழித்து விட்டு தான் தங்கள் வாகனங்களை எடுத்து செல்கின்றனர்.

இதனால் அந்தப்பகுதிகளில் வருகின்ற அரசு மற்றும் தனியார் பஸ்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறுகிறது. இதனால் பொதுமக்களும் அப்பகுதிகளில் சாலையை கடக்க பெரிதும் சிரமப்படுகின்றனர். சில குறிப்பிட்ட வர்த்தக நிறுவனங்களின் முன்னால் நிறுத்தப்படுகின்ற வாகனங்களை சட்டம் ஒழுங்கு போக்குவரத்து போலீசார் கண்டு கொள்வதில்லை.

கோரிக்கை

தீபாவளி பண்டிகை வரும் இந்த நேரத்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பொதுமக்களிடம் இருந்து பணம், தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை மர்ம நபர்கள் திருடி செல்ல வாய்ப்பும் உண்டு. எனவே கரூர் ஜவஹர் பஜார், கோவை ரோடு, மனோகரா கார்னர் போன்ற இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் மினி பஸ்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்தவும், நிறுத்தம் இல்லாத இடங்களில் மினி பஸ்களை நிறுத்தும் ஒரு சில மினி பஸ் டிரைவர்கள் மீதும் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா? மக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

போக்குவரத்து நெரிசல்

கரூர் மாவட்டம் இளையபெருமாள் பட்டியை சேர்ந்த இளையராஜா கூறுகையில், மினி பஸ் ஒரு நல்ல திட்டமாகும். பஸ் வசதி இல்லாத பகுதிகளுக்கும் பஸ் வசதி கிடைத்தது ஒரு வரப் பிரசாதம் என்று கூறலாம். ஆனால் கரூர் கோவை ரோடு, திண்ணப்பா தியேட்டர் லைன் உள்ளிட்ட பகுதிகளில் மினி பஸ்கள் ஊர்ந்து கொண்டு செல்வதை காண முடிகிறது. பயணிகள் இல்லாத இடங்களிலும் ஊர்ந்து செல்வது இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்களில் பஸ்சுக்கு பின்னால் வருபவர்களுக்கு இது ஒரு இடையூறாக உள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் மினி பஸ்கள் இயக்க வேண்டும் என்றார்.

சாலைகளை சீரமைக்க வேண்டும்

கரூர் காந்திகிராமம் பாரதியார் தெருவை சேர்ந்த குணசேகரன் கூறுகையில், கடந்த சில மாதங்களாக காந்திகிராம பகுதிகளுக்கு காலை நேரங்களில் மட்டுமே இயக்கப்படும் மினி பஸ்கள் அதன் பிறகு இயக்குவது கிடையாது. இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மினி பஸ்சுக்காக வெகு நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால் மினி பஸ்களில் செல்லும் போது வயதானவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இப்பகுதியில் உள்ள சாலைகளை சீரமைத்து முறையாக மினி பஸ்களை இயக்க வேண்டும் என்றார்.

அதிகஹாரன் எழுப்ப வேண்டாம்

வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த கவிதா கூறுகையில், எங்களைப் போன்ற கிராம பகுதிகளுக்கு மினி பஸ்கள் இயக்கப்படுது பெரும் உதவியாக உள்ளது. இருப்பினும் மினி பஸ்கள் ஊர்ந்து செல்வதால் குறிப்பிட்ட நேரத்திற்கு உரிய இடத்தை சென்றடைவதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும் நகரப் பகுதிகளில் அதிகமாக மினி பஸ்கள் அதிக ஹாரன் எழுப்புகின்றனர். இதனை டிரைவர்கள் தவிர்க்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்