நாகப்பட்டினம்
நெல் மூட்டைகளுடன் லாரிகள் நீண்ட வரிசையில் நிற்பதால் போக்குவரத்து நெரிசல்
|நாகை முதலாவது கடற்கரை சாலையோரத்தில் எடை போடுவதற்காக நெல் மூட்டைகளுடன் லாரிகள் நீண்ட வரிசையில் நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை முதலாவது கடற்கரை சாலையோரத்தில் எடை போடுவதற்காக நெல் மூட்டைகளுடன் லாரிகள் நீண்ட வரிசையில் நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பா நெல் அறுவடை பணி
நாகை மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்யும் வகையில் மாவட்டம் முழுவதும் 172 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த கொள்முதல் நிலையங்களில் தினந்தோறும் 4 ஆயிரத்து 500 முதல் 5 ஆயிரம் டன் வரை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் திருப்பூண்டி, காடம்பாடி, அருந்தவன்புலம், கொத்தங்குடி, சாட்டியகுடி, ஆயக்காரன்புலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்குகளில் சேமிக்கப்பட்டு வருகிறது.
திறந்தவெளி சேமிப்பு மையம்
நாகை பகுதிகளில் உள்ள கொள்முதல் நிலையங்களில் சேமிக்கப்பட்ட நெல் மூட்டைகள் எடை போடுவதற்காக லாரிகள் மூலம் முதலாவது கடற்கரை சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான எடை போடும் மையத்துக்கு கொண்டு வரப்படுகிறது. எடை போட்ட பின்னர் அங்கிருந்து திறந்தவெளி சேமிப்பு மையங்களுக்கும், அரவைக்காக வெளிமாவட்டங்களுக்கும் சரக்கு ரெயில் மூலமாக அனுப்பி வைக்கப்படுகிறது.
போக்குவரத்து நெரிசல்
நாகை முதலாவது கடற்கரை சாலை வழியாக வேளாங்கண்ணி, திருவாரூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள், கார், ஆட்டோ உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் தினந்தோறும் சென்று வருகின்றன.
முதலாவது கடற்கரை சாலையில் உள்ள எடைப்போடும் மையம் அருகே லாரிகள், ஆங்காங்கே சாலையின் ஓரத்தில் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றன. இதனால் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆம்புலன்ஸ் கூட இந்த பகுதியை கடந்து செல்ல சிரமப்படுகிறது.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நாகை புற வழிச்சாலையில் எடைப்போடும் மையத்தை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நாகை கீச்சாங்குப்பத்தை சேர்ந்த ராஜேந்திரன் நாட்டார் கூறுகையில், நாடு சுதந்திரம் அடைந்தபோது இருந்த சாலைகள் நாகையில் இன்றும் அப்படியே உள்ளது. ஆனால் வாகனங்களும், மக்கள் தொகையும் பல மடங்கு அதிகரித்து விட்டது.
இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு ெரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்காக போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நெல் மூட்டைகளை ஏற்றி வந்து எடை போடும் லாரிகளால் நாகை முதலாவது கடற்கரை சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புறவழிச் சாலையில் எடை மேடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.