திருவள்ளூர்
திருத்தணி முருகன் கோவிலில் போக்குவரத்து நெரிசல்
|திருத்தணி முருகன் கோவிலில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருத்தணியில் முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான முருகன் கோவில் மலைமேல் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக ஆடிகிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், உள்ளிட்ட திருவிழா காலங்களிலும், முகூர்த்த நாள் மற்றும் விடுமுறை நாட்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்வர். இந்த நிலையில் நேற்று நாட்டின், 74-வது குடியரசு தினத்தையொட்டி, அரசு விடுமுறை என்பதால் திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
இதனால் பொதுவழியில் மூலவரை தரிசிக்க நீண்ட வரிசையில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். அதே போல் ரூ.100 கட்டண தரிசனத்தில், ஒன்றரை மணி நேரம் வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். இதனால் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்ததால், மலைக்கோவில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.