திண்டுக்கல்
பழனி கடைவீதியில் தொடரும் போக்குவரத்து நெரிசல்; வாகன ஓட்டிகள் அவதி
|பழனி கடைவீதியில் தொடரும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
பழனி வேல் ரவுண்டானாவில் இருந்து பெரியகடைவீதி செல்லும் சாலையில் காய்கறி, மளிகை, நகை கடைகள் அதிகமாக உள்ளன. இங்கு பொருட்கள் வாங்க மக்கள் அதிகமாக வருவதால் எப்போதும் கூட்டமாக இருக்கும். குறிப்பாக கடைவீதிக்கு வருபவர்கள் தங்களது வாகனங்களை கடைகளின் அருகிலேயே சாலையோரத்தில் நிறுத்துகின்றனர். மேலும் அந்த பகுதிகளில் சாலையோர கடைகள் ஏராளமாக உள்ளதால் கடைவீதி சாலையில் வாகனங்கள் எப்போதும் அணிவகுத்தே செல்லும் நிலை உள்ளது.
இந்தநிலையில் கடை வீதிக்கு விதிகளை மீறி பகல் நேரத்திலேயே சரக்கு லாரிகள், வேன்கள் வருகின்றன. அவ்வாறு வரும் வாகனங்கள் அப்பகுதியில் உள்ள கடைகளின் முன்பு பொருட்களை இறக்கி வைப்பதற்காக நீண்ட நேரம் நிறுத்தப்படுகின்றன. இதனால் மார்க்கெட், கடைவீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அப்போது வாகன ஓட்டிகள் கொளுத்தும் வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது.
இந்தநிலையில் நேற்று பழனி மார்க்கெட் சாலையில் லாரிகள் சரக்குகளை இறக்க வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். எனவே பழனி பெரியகடை வீதியில் பகல் நேரங்களில் லாரிகள் செல்வதை தடுக்கவும், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.