< Back
மாநில செய்திகள்
ஆண்டிப்பட்டியில் ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு
தேனி
மாநில செய்திகள்

ஆண்டிப்பட்டியில் ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு

தினத்தந்தி
|
1 Aug 2022 5:29 PM GMT

ஆண்டிப்பட்டியில் ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று இரவு ஆண்டிப்பட்டியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக கொட்டித்தீர்த்த மழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.

அதன்படி, ஆண்டிப்பட்டி-தெப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி-மேக்கிழார்பட்டி சாலையில் அமைக்கப்பட்டுள்ள ெரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் நேற்று காலை அந்த வழியாக வாகனங்கள் செல்லமுடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வரிசையில் காத்திருந்த வாகனங்களில் ஆமைவேகத்தில் தண்ணீரில் ஊர்ந்து சென்றன. இதன் காரணமாக காலையில் பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகள், அலுவலகத்திற்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிப்பட்டி பேரூராட்சி பணியாளர்கள், ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். மழை பெய்யும் போதெல்லாம் இந்த ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்குவது தொடர்கதையாகி வருகிறது. எனவே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்