< Back
மாநில செய்திகள்
நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2-வது ஆலைக்காக ராட்சத குழாய் பதிக்கும் பணிகளுக்காக  போக்குவரத்து மாற்றம்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2-வது ஆலைக்காக ராட்சத குழாய் பதிக்கும் பணிகளுக்காக போக்குவரத்து மாற்றம்

தினத்தந்தி
|
30 March 2023 1:38 PM IST

நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2-வது ஆலைக்காக கிழக்கு கடற்கரை சாலையின் ஒரு பகுதியில் ராட்சத குழாய் பதிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கடல்நீரை குடிநீராக்கும் ஆலை

செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் முதல் ஆலையில் தற்போது தினமும் 100 மில்லியன் லிட்டர் கடல் நீர் தினமும் சுத்திகரிக்கப்பட்டு தென்சென்னை பகுதிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. தற்போது தென்சென்னை பகுதிக்கு குடிநீர் தேவை அதிகரிப்பால் தமிழக அரசு தற்போது உள்ள குடிநீர் ஆலைக்கு அருகாமையில் ரூ.1,516 கோடி மதிப்பீட்டில் தினமும் 150 மில்லியன் லிட்டர் கடல் நீரை சுத்திகரித்து குடிநீராக்கும் புதிய ஆலையை அமைத்து வருகிறது.

இந்த ஆலையில் சுத்திகரிக்கப்படும் குடிநீர் தென்சென்னையில் உள்ள வேளச்சேரி, ஆலந்தூர், பரங்கிமலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மூவரசன்பேட்டை, சோழிங்கநல்லூர், உள்ளகரம்-புழுதிவாக்கம், மடிப்பாக்கம் போன்ற பகுதிகளுக்கும் சிறுசேரியில் உள்ள தகவல் தொழில் நுட்ப பூங்கா பகுதிக்கும் ராட்சத குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு வினியோகிக்கப்பட்ட உள்ளது.

இதையடுத்து தற்போது நெம்மேலி கிழக்கு கடற்கரையில் இருந்து தென் சென்னைக்கு மேற்குறிப்பிட்ட பகுதிகள் வரை குடிநீர் கொண்டு செல்ல ராட்சத இரும்பு குழாய்கள் பதிக்கும் பணிகள் 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. இந்த பணி வெளிநாடுகளில் கடைபிடிக்கப்படும் தொழில்நுட்பங்களை முன்மாதியாக கொண்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.

ராட்சத குழாய்கள்

இந்த நிலையில் நேற்று புதிய குடிநீர் ஆலைக்கு எதிரில் கிழக்கு கடற்கரை சாலையை கடக்கும் வகையில் 70 மீட்டர் தூரத்திற்கு தார் சாலையின் இரு புறமும் எந்திரங்கள் மூலம் வெட்டி எடுத்து கிரேன் உதவியுடன் ராட்சத இரும்பு குழாய்கள் பதிக்கும் பணி தொடங்கப்பட்டது. சாலைக்கு மத்தியில் பதிக்கப்படும் ஒவ்வொரு குழாய்களும் கியாஸ் வெல்டிங் மூலம் ஒன்றோடு, ஒன்று இணைக்கப்பட்டன. குறிப்பாக குழாய் வழியாக தண்ணீர் அதிவேகத்தில் செல்லும் போது நீர் கசிவு ஏற்படாத வகையில் குழாயின் உள்பகுதிலும், வெளிப்பகுதிலும் நவீன தொழில் நுட்பத்தில் கியாஸ் மூலம் வெல்டிங் செய்யப்பட்டு இணைக்கப்பட்டு வருகின்றன.

போக்குவரத்து மாற்றம்

கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் குழாய் பதிக்கும் பணிகளால் நெம்மேலியில் சூளரிக்காடு முதல் கிருஷ்ணன்காரணை வரை ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு கிழக்கு கடற்கரை சாலையை ஒரு வழி பாதையாக மாற்றம் செய்து வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

குழாய் பதிக்கும் ஒரு வழி பாதையில் வாகனங்கள் எதுவும் செல்லாத வண்ணம் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, மற்றொரு ஒரு வழி பாதையில் சென்னை மற்றும் புதுச்சேரிக்கு செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலையில் புதிய குடிநீர் ஆலைக்கு எதிரில் மேற்கு பகுதியின் ஒரு வழி பாதையில் பணிகள் நடப்பதால் கிழக்கு பக்கம் உள்ள மற்றொரு வழி பாதையில் வாகனங்கள் செல்ல மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், மாமல்லபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் ஆகியோர் மேற்பார்வையில் போலீசார் வாகனங்கள் செல்ல 1 கிலோ மீட்டர் தொலையில் இரண்டு பகுதிகளில் தடுப்புகள் அமைத்து உள்ளனர். அந்த தடுப்புகள் வரை வரும் வாகன ஓட்டிகள் பின்னர் ஒரு வழி பாதையை கடந்து புதுச்சேரி மற்றும் சென்னை செல்ல அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்