சென்னை
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியையொட்டி சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்
|சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியையொட்டி அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது, மேலும் அங்கு 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
கிரிக்கெட் திருவிழா
சென்னை சேப்பாக்கத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் இன்று (திங்கட்கிழமை) ஏப்ரல்-12, ஏப்ரல்-21, மே-10, மே-14, ஆகிய நாட்களில் நடக்கும் போது, மாலை 5 மணி முதல், இரவு 11 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.
அதேபோல் ஏப்ரல்-30, மே-6, ஆகிய நாட்களில் பிற்பகல் 1 மணி முதல், இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும். மேலும் போட்டி நடைபெறும் நாட்களில் சேப்பாக்கத்தில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
போக்குவரத்து மாற்றம்
போட்டி நடக்கும் நாட்களில் சேப்பாக்கம் பகுதியில் கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
* விக்டோரியா விடுதி சாலை வழியாக பாரதி சாலையில் இருந்து வாகனங்கள் போகலாம். ஆனால் வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் செல்ல முடியாது.
* பெல்ஸ்சாலை தற்காலிகமாக ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. பெல்ஸ் சாலை, பாரதி சாலை சந்திப்பில் இருந்து வாகனங்கள் போகலாம். ஆனால் வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து வாகனங்கள் போகமுடியாது.
* ரத்னா கபே ஓட்டல் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள், பாரதி சாலை, பெல்ஸ்சாலை சந்திப்பில் திருப்பி விடப்பட்டு, பெல்ஸ் சாலை வழியாக வாலாஜா சாலை போகலாம். பெல்ஸ் சாலை, பாரதி சாலை சந்திப்பில் இருந்து கண்ணகி சிலைக்கு வாகனங்கள் போக அனுமதி இல்லை.
வாகனங்கள் நிறுத்தும் இடம்
* எம்.பி.டி.டபிள்யூ போன்ற எழுத்து அட்டைகளை கொண்ட வாகனங்கள் போர் நினைவு சின்னம், காந்தி சிலை வழியாக வந்தால், பாரதி சாலையில் வந்து, விக்டோரியா விடுதி சாலை மார்க்கமாக தங்கள் வாகன நிறுத்தும் இடத்தை அடையலாம்.
* பி.ஆர்.எழுத்து அடையாள அட்டைகள் வைத்திருப்பவர்கள், வாலாஜா சாலை வழியாக தங்கள் இடத்திற்கு போகலாம்.
* அடையாள அட்டை இல்லாமல் வரும் வாகனங்கள் பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரில் உள்ள கடற்கரை உட்புற சாலையில் வாகனங்களை நிறுத்தலாம்.
மேற்கூறிய தகவல்கள் போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.