சென்னை
கே.கே.நகரில் நாளை முதல் 22-ந் தேதி வரை போக்குவரத்து மாற்றம்
|மழைநீர் வடிகால் பணி காரணமாக கே.கே.நகரில் நாளை முதல் 22-ந் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் கே.கே.நகர் ராஜமன்னார் சாலை-பி.டி.ராஜன் சாலை சந்திப்பிலும், லட்சுமண சாலை-ஆர்.கே.சண்முகம் சாலை சந்திப்பிலும் நாளை (சனிக்கிழமை) முதல் 22-ந் தேதி வரை மழைநீர் வடிகால் பணி நடைபெற உள்ளது. இதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
* 2-வது அவென்யூவில் இருந்து பி.டி.ராஜன் சாலை வழியாக ராஜ மன்னார் சாலை செல்லும் வாகனங்கள் பி.டி.ராஜன் சாலையில் திருப்பி விடப்பட்டு, ராமசாமி சாலை ஆர்.கே.சண்முகம் சாலை வழியாக ராஜமன்னார் சாலை சென்று இலக்கை அடையலாம்.
* ராமசாமி சாலையில் இருந்து பி.டி.ராஜன் சாலை செல்லும் வாகனங்கள் ராமசாமி சாலை-ஆர்.கே.சண்முகம் சாலை சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு ஆர்.கே.சண்முகம் சாலை, ராஜமன்னார் சாலை வழியாக சென்று பி.டி.ராஜன் சாலை செல்லலாம்.
* பி.டி.ராஜன் சாலை ராமசாமி சாலை சந்திப்பில் இருந்து ராஜமன்னார் சாலை செல்ல அனுமதி இல்லை.
* முனுசாமி சாலை மற்றும் 80 அடி சாலையில் இருந்து ராஜமன்னார் சாலை வழியாக பி.டி.ராஜன் சாலை செல்லும் வாகனங்கள் வழக்கம்போல் செல்லலாம். மேலும் பி.டி.ராஜன் சாலையில் இருந்து லட்சுமணசாமி சாலை செல்லும் வாகனங்கள் வழக்கம்போல் செல்லலாம்.
மேற்கண்ட தகவல் சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.