சென்னை
மெட்ரோ ரெயில் பணிக்காக மேடவாக்கம்-சோழிங்கநல்லூர் சாலையில் போக்குவரத்து மாற்றம்
|மெட்ரோ ரெயில் பணிக்காக மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தாம்பரம் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னையை அடுத்த மேடவாக்கம் கூட்ரோடு சந்திப்பில் இருந்து சோழிங்கநல்லூர் சந்திப்பு வரை உள்ள வேளச்சேரி பிரதான சாலை மற்றும் செம்மொழி சாலை ஆகியவற்றில் சென்னை மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகிறது.
எனவே மேடவாக்கம் சுற்றி உள்ள பகுதிகளில் ஒரு வார காலத்துக்கு இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் சோதனை அடிப்படையில் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய தாம்பரம் மாநகர போக்குவரத்து போலீசார் உத்தேசித்து உள்ளனர்.
அதன்படி, சோழிங்கநல்லூர் சந்திப்பில் இருந்து மேடவாக்கம் செம்மொழி சாலை வழியாக தாம்பரம் மற்றும் மாம்பாக்கம் செல்லும் அனைத்து வாகனங்களும் மேடவாக்கம் சந்திப்பில் இருந்து வலது புறம் திரும்பி ஜெயசந்திரன் டெக்ஸ்டைல் சந்திப்பில் திரும்பி மேடவாக்கம் புதிய மேம்பாலம் வழியாக செல்ல வேண்டும்.
மாம்பாக்கம் சாலையில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் மாம்பாக்கம்- மேடவாக்கம் சந்திப்பில் இருந்து வலது புறம் திரும்பி ஜெயசந்திரன் டெக்ஸ்டைல் சந்திப்பில் திரும்பி மேடவாக்கம் புதிய மேம்பாலம் வழியாக செல்ல வேண்டும். மாம்பாக்கம் சாலை மற்றும் மேடவாக்கம் சந்திப்பு வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து நேரடியாக வாகனங்கள் தாம்பரம் நோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த போக்குவரத்து மாற்றங்களுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பை தர வேண்டும் என தாம்பரம் போக்குவரத்து போலீசார் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.