< Back
மாநில செய்திகள்
சாலை சீரமைப்புக்காக போக்குவரத்து மாற்றம்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

சாலை சீரமைப்புக்காக போக்குவரத்து மாற்றம்

தினத்தந்தி
|
27 Aug 2023 1:26 AM IST

மார்த்தாண்டத்தில் சாலை சீரமைப்புக்காக போக்குவரத்து மாற்றம்

குழித்துறை,

மார்த்தாண்டம் சந்திப்பில் இருந்து செல்லும் வடக்கு சாலையில் பள்ளிகள், எல்.ஐ.சி. போன்ற அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளன. இந்த சாலையில் ஞாறான்விளை பகுதியில் குழித்துறை நகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்கிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்காக சாலை முழுவதும் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டன. அதன் பிறகு நீண்ட காலமாக சாலை சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக காட்சி அளித்தது.

அதைத்தொடர்ந்து சாலையை தார் போட்டு சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பிலும், அரசியல் கட்சிகள் சார்பிலும் கோரிக்கை வைத்து, போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில் சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை நிதி ஒதுக்கியது. அதைத் தொடர்ந்து சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு சாலையை சீரமைத்து தார்போடும் பணியை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். சாலையில் கிடந்த பள்ளங்களில் ஜல்லிகள் பரப்பப்பட்டன. ஆனால் சாலையில் சில இடங்களில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டது. எனவே அதை சரி செய்யும் பணி நடைபெற்றது.

அது முடிவடைந்ததை தொடர்ந்து வடக்கு சாலையில் தார் போட்டு சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இதனால் மார்த்தாண்டம் சந்திப்பு பகுதியில் வடக்கு சாலை தொடங்கும் இடத்தில் போலீசாரால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் வடக்கு சாலை வழியாக அரசு பஸ்கள், பள்ளி வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மார்த்தாண்டம் சந்திப்பில் இருந்து வடக்கு சாலை வழியாக தி்க்குறிச்சி செல்லும் வாகனங்கள் பயணம் வழியாகவும், மேல்புறம் செல்லும் வாகனங்கள் குழித்துறை வழியாக மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும். வடக்கு சாலையில் தார் போடும் பணி முடிவடையும் வரை இந்த போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்